ETV Bharat / bharat

கர்நாடக தேர்தலில் களமிறங்கும் தேர்தல் மன்னன் பத்மராஜன்.. யாருக்கு எதிராக போட்டி தெரியுமா?

author img

By

Published : Apr 15, 2023, 1:31 PM IST

232 முறை தேர்தலில் படுதோல்வி அடைந்தும் அயராது தேர்தல்களில் போட்டியிட்டு வரும் தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் பத்மராஜன் இம் முறை கர்நாடகா தேர்தலில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக வேட்புமனுதாக்கல் செய்து உள்ளார்.

Padmaraj
Padmaraj

சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். ஹோமியோபதி மருத்துவரான பத்மராஜனை, டாக்டர் என அழைத்தால் யாருக்கும் இவரை தெரியாது. அதற்கு பதிலாக தேர்தல் மன்னன் பத்மராஜன் என அழைத்தால் இவரை தெரியாத ஆளே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு பத்மராஜன் போட்டியிடாத தேர்தல்களே இல்லை.

உள்ளூரை நிர்வகிக்கும் ஊராட்சி தேர்தலில் இருந்து நாட்டை நிர்வகிக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் என பத்மராஜன் போட்டியிடாத தேர்தல்களே இல்லை. இதுவரை பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முதல் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை என 232 தேர்தல்களில் போட்டியிட்டு பத்மராஜன் படுதோல்வி அடைந்து உள்ளார்.

முயற்சி திருவினையாக்கும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப பத்மராஜன் தொடர்ந்து போராடி வருகிறார். பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்து வரும் தேர்தல் மன்னன் பத்மராஜன் 233-வது முறையாக கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்து உள்ளார்.

தேர்தல் மன்னன் பத்மராஜன் யாரை எதிர்த்து போட்டியிட உள்ளார் என்ற தகவல் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிக்காவி தொகுதியில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை எதிர்த்து பத்மராஜன் வேட்புமனுத்தாக்கல் செய்து உள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பத்மராஜன்.

தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தனது கால் தடத்தை பத்மராஜன் பதித்து உள்ளார். முக்கிய தலைவர்களான நரசிம்மராவ், வாஜ்பாய், எஸ்.எம்.கிருஷ்ணா, பங்காரப்பா, எடியூரப்பா, ஏ.கே. ஆண்டனி, சதானந்த கெளடா, பினராயி விஜயன், கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்தது பத்மராஜன் களம் கண்டு உள்ளார்.

தேசிய தலைவர்களுக்கு டஃப் கொடுத்த பத்மராஜன் தமிழக தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார். அதேபோல் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராகவும் பத்மராஜம் களமாடி உள்ளார்.

1988 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 32 மக்களவை உறுப்பினர் தேர்தல்கள், 50 மேலவை உறுப்பினர் தேர்தல்கள், 5 குடியரசு தலைவர் தேர்தல்கள், 5 குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், 3 சட்டமன்ற மேலவை உறுப்பினர் தேர்தல், 1 மேயர் தேர்தல், 4 பஞ்சாயத்து தலைவர் தேர்தல், 12 கவுன்சிலர், 2 மாவட்ட கவுன்சிலர் என வாய் வலிக்கும் அளவுக்கு பல்வேறு தேர்தல்களில் பத்மராஜன் போட்டியிட்டு உள்ளார்.

எந்த தேர்தலையும் விட்டு வைக்காத பத்மராஜன் சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். கடந்த 2019 ஆம் ஆண்டு வயநாடு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்ட பத்மராஜன் அதிகபட்சமாக ஆயிரத்து 850 வாக்குகள் பெற்று ஆச்சரியமூட்டினார்.

முன்னதாக 2011-ஆம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தேர்தலில் 6 ஆயிரத்து 773 வாக்குகள் பெற்று பத்மராஜன் அரசியல் தலைவர்களுக்கே அதிர்ச்சியூட்டினார். தனது தொடர் தேர்தல் போட்டிகளால் பல்வேறு சாதனை புத்தகங்களிலும் பத்மராஜன் இடம் பிடித்து உள்ளார். இந்தியன் புக்ப் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகங்களில் பத்மராஜன் இடம் பிடித்து உள்ளார்.

இதில் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், பத்மராஜனுக்கு "அனைத்து இந்தியா தேர்தல் ராஜா" என்ற பட்டத்தை கொடுத்து கவுரப்படுத்தி உள்ளது. தொடர் தோல்விகளால் மனம் தளரக் கூடாது என பொன்மொழிக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் பத்மராஜன் தற்போது கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக வேட்பு மனுத் தாக்கல் செய்து உள்ளார்.

வரும் மே 10-ஆம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் மாற்றத்தை கொண்டு வருவாறா என்ற பத்மராஜனின் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க : மெகுல் சோக்சியை நாடு கடத்த தடை - ஆண்டிகுவா நீதிமன்றத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.