ETV Bharat / bharat

Karnataka Election date: கர்நாடக மாநில தேர்தல் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Mar 29, 2023, 12:08 PM IST

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு வரும் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகா தேர்தல் தேதி அறிவிப்பு
கர்நாடகா தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழலத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஆளும் பாஜக, பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸ், குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே 124 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் கட்சி அனல் பறக்கும் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாநிலம் என்பதால் எப்படியாவது தனது செல்வாக்கைக் கட்சியில் நிரூபிக்க வேண்டும் என கார்கே தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வருகிறது. மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் போர்வாள் எனப் போற்றப்படும் டிகே சிவக்குமாரும் தனது பங்கிற்குத் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஆளும் பாஜக அரசுக்கு எதிராகத் தீவிர பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியினர் விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மதப்பிரச்சனை, அண்மையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டது உள்ளிட்டவற்றைப் பிரதானமாக முன்வைத்து வருகின்றனர். மறுமுனையில் ஆளுங்கட்சியான பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பாஜக ஆட்சியில் கர்நாடக மாநில வளர்ச்சி, ஐடி பூங்கா, சாலை மேம்பாடு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை முன்வைத்து பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.

பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். அதேபோல், காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார், "கர்நாடகாவை பொறுத்தவரையில் 5 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 579 பேர் வாக்களிக்க உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 2,62,42,561 பேர், பெண் வாக்காளர்கள் 2,59,26,319 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 4,699 பேர் என்றார்.

மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்: தொடர்ந்து பேசிய அவர், "தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 13.04.2023 வியாழன் அன்று தொடங்கி 20.04.2023 வியாழன் வரையிலும், வேட்புமனு பரிசீலனையானது 21.04.2023 வெள்ளிக்கிழமை நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற 24.04.2023 திங்கட்கிழமை இறுதி நாள், வாக்குப்பதிவானது 10.05.2023 புதன்கிழமையும், வாக்கு எண்ணிக்கையானது 13.05.2023 சனிக்கிழமை அன்றும் நடைபெறும் என அறிவித்தார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவரை சந்திக்க முயன்ற 6 பழங்குடியினத் தலைவர்களுக்கு வீட்டுச்சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.