ETV Bharat / bharat

வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்காக கலை நிகழ்ச்சி நடத்தியதால் ஆக்ரா கோட்டை சேதமா?

author img

By

Published : Feb 14, 2023, 6:55 PM IST

ஆக்ரா கோட்டையில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட 'திவான் இ ஆம்' என்ற சந்திப்புக்கூடத்தில் சுவர்களில் விரிசல் விட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

After
After

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்குப் பிறகு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆக்ராவை சுற்றிப்பார்த்தனர்.

ஆக்ரா கோட்டையில் அவர்களுக்காக இசை நிகழ்ச்சிகள், லேசர் லைட் ஷோ உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிலையில், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்காக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட ஆக்ரா கோட்டையில் சுவர்களில் விரிசல் விட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோட்டையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட 'திவான் இ ஆம்' என்ற சந்திப்புக்கூடத்தில் விரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சுவர்களில் பூச்சுகள் உரிந்ததாகவும் தெரிகிறது.

கலாசார நிகழ்ச்சிகள் நடத்தியதே விரிசல் ஏற்படக் காரணம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாரம்பரிய நினைவுச் சின்னங்களிலோ, புராதான சுற்றுலாத் தலங்களிலோ நிகழ்ச்சிகள் நடத்தினால், 40 டெசிபல் வரை மட்டுமே ஒலி எழுப்ப யுனெஸ்கோ அனுமதி அளித்துள்ளதாகவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஒலி எழுப்பியதால் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் ஆய்வாளர் ராஜ்குமார் படேல் கூறும்போது, "கோட்டையில் ஆய்வு செய்தோம். திவான் இ ஆம்-ல் ஆய்வு செய்தபோது சேதம் ஏற்பட்டது தெரியவந்தது. இது ஜி20 பிரதிநிதிகளுக்காக நிகழ்ச்சிகள் நடத்தியதால் ஏற்பட்டதா? அல்லது அதற்கு முன்பாக ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரித்து தெரிவிக்கப்படும்" என்றார்.

கோட்டையில் கடந்த 10ஆம் தேதி கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையின்போது அதிக ஒலி எழுப்பப்பட்டதாகவும், அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மற்றொரு தொல்லியல் துறை அதிகாரி கூறினார். தற்போது கோட்டையில் விரிசல் விட்ட பகுதிகளில் பார்வையாளர்கள் செல்ல முடியாதபடி அதிகாரிகள் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

இதையும் படிங்க: GIS2023: உ.பி.யில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.