ETV Bharat / bharat

கல்விக் கடன் ரத்து; தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு - அரசு அதிரடி

author img

By

Published : Sep 1, 2021, 4:00 PM IST

Updated : Sep 1, 2021, 4:06 PM IST

கல்விக் கடனை தள்ளுபடி செய்ததுடன், தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

puducherry assembly
puducherry assembly

புதுச்சேரி: சட்டப்பேரவையின் 15ஆவது கூட்டத் தொடரின், ஐந்தாவது நாள் கூட்டம் இன்று (செப்.1) நடந்தது.

இக்கூட்டத்தில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நாஜிம் பேசியபோது, "புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏற்கனவே பள்ளிகள் திறப்பதற்கு முன்பு இணைய வழியில் மாணவர்கள் படித்துவந்தனர்.

அவர்களுக்கு அரசும் புத்தகங்களை வழங்கி படிக்க வைத்தனர். புதுச்சேரியில் இன்று வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்படவில்லை. புதுச்சேரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழ்நாடு அரசு வழங்கி இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால் மாணவர்களுக்கு இன்னும் அவை வழங்கப்படவில்லை" என்றார்.

முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு

சுயேச்சை உறுப்பினர் நேரு பேசுகையில், "இன்று பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதி இல்லை. அவர்கள் தனிப்பட்ட முறையில் பள்ளிக்கு செல்வதற்கு ரூபாய் 100 செலவாகிறது" என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய கல்வி அமைச்சர் நமச்சிவாயம், "மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரை நாள் பள்ளி என்பதால் மாணவர்கள் மதிய உணவு வீட்டில் சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்றார்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உரை கீழ்வருமாறு

  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுமாறு ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து வற்புறுத்தப்போகிறோம்.
  • பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.20,000 ஆக வழங்கப்படும்.
  • சுகாதாரத்துறையில் 100 ஆண்டுக்கு மேல் உள்ள மருத்துவப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்.
  • புதுச்சேரியில் அரசு துறையில் பணியாற்றுபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10,000 வழங்கப்படும்.
  • பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாத இறுதியில் பத்தாயிரம் சம்பளம் வழங்கப்படும்.
  • புதுச்சேரிக்கு மேலும் ரூ.500 கோடி கூடுதல் நிதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • பாசிக், பாஸ்ப்கோ நிறுவனங்களை மீண்டும் சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
  • நடப்பு நிதியாண்டில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியாக வழங்கப்படும்.
  • புதுச்சேரியில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.9000இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Last Updated :Sep 1, 2021, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.