ETV Bharat / bharat

Bonalu festival: ஹைதராபாத்தில் 'போனாலு' திருவிழா இன்று கோலாகல துவக்கம்!

author img

By

Published : Jun 22, 2023, 2:04 PM IST

Updated : Jun 22, 2023, 2:28 PM IST

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் இரட்டை நகரங்களான ஹைதராபாத், செகந்திராபாத் இரட்டை நகரங்களில், ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாடம் (ஜூன் / ஜூலை மாதங்களில்) மாதத்தில், 'போனாலு' என்ற பெயரில், பாரம்பரிய நாட்டுப்புற விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Bonalu Festival starts in Hyderabad from today
Bonalu festival: தெலங்கானா மாநிலத்தின் 'பொனாலு' திருவிழா ஹைதராபாத்தில் இன்று கோலாகல துவக்கம்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் தனித்துவப் பாரம்பரிய விழாவான ‘ஆஷாத் போனாலு’விழா, மிகுந்த உற்சாகத்துடன் இன்று (ஜூன் 22ஆம் தேதி) துவங்குகிறது. இந்த திருவிழாவை ஒட்டி, ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களில் உள்ள கோயில்கள், மலர்கள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களால், அழகுற அலங்கரிக்கப்பட்டு உள்ளன. கோல்கொண்டா கோட்டையில், உள்ள மகாகாளி கோயிலில், முதற்கட்டமாக, இந்த விழா துவங்க உள்ளது.

லங்கர் இல்லத்தில், இன்று பிற்பகல் நடைபெற உள்ள தொட்டிகள் ஊர்வலத்தில் அமைச்சர்கள் இந்திரகரன் ரெட்டி, தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், மஹ்மூத் அலி ஆகியோர் கலந்து கொண்டு, அரசு சார்பில் அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளனர்.

இந்த விழாவிற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களுக்கு தேவையான, அனைத்து விதமான ஏற்பாடுகளும், தெலங்கானா அரசால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆஷாத் போனாலு திருவிழாவை ஒட்டி, ஹைதராபாத் சுற்றுவட்டாரமே, ஆன்மிக நகரமாக உருமாற உள்ளது.

பெண்களின் முக்கியப் பங்களிப்புடன் நடைபெறும் போனாலு திருவிழா, மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அதிக முக்கியத்துவம் வாய்ந்த தனித்துவமான கலாசார பண்டிகை ஆகும். இது பாரம்பரியம் மற்றும் பெண்ணிய சக்தியுடன் ஆழமாக பின்னிப்பிணைந்த ஒரு திருவிழா ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில், "Bonam" என்ற சொல், குடும்ப உறவுகள் மற்றும் மரியாதையில் வேரூன்றிய ஒரு இணைப்பைக் குறிக்கிறது. பெண்கள், மிகுந்த பக்தியுடன், தெய்வீக அன்னையான அம்மனுக்கு, மண் அல்லது செம்பு பாத்திரங்களில் அரிசி, பால் மற்றும் தயிர் அடங்கிய புனிதமான பிரசாதத்தை படைக்கின்றனர்.

போனாலு திருவிழாவை, இந்த ஆண்டு விமரிசையாக நடத்தும் பொருட்டு, தெலங்கானா மாநில அரசு, ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது, அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் விழாக்கள் சிறப்பாக நடத்தப்பட உள்ளதாக, அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் தெரிவித்து உள்ளார்.

கோல்கொண்டாவில், இன்று உற்சாகமாக துவங்கும் ஆஷாத் போனாலு விழா, ஜூலை 9ஆம் தேதி செகந்திராபாத் மகாகாளி கோயிலிலும், 16ஆம் தேதி பழைய நகரிலும், 17ஆம் தேதி கூட்டுக் கோயில்களின் சார்பில் ஊர்வலமும், ஹைதராபாத் நகரம் முழுவதும் நடைபெற உள்ளன. இலட்சக்கணக்கான பக்தர்கள், இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

போனாலு திருவிழாவின் சுவாரசியமான பின்னணி...

போனாலு திருவிழா, கிராம தெய்வங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிராம தெய்வங்களான எல்லம்மா, மைசம்மா, போச்சம்மா, முத்யாலம்மா, பெத்தம்மா உள்ளிட்ட தெய்வங்கள், இந்த விழாவின் போது, மஞ்சள், குங்குமம், புடவைகள் உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்படுகின்றன. இந்த தெய்வங்கள், பலம் பொருந்தியவர்களாகவும், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பவர்களாக உள்ளதாக, மக்கள் கருதி வருகின்றனர். இந்த பாரம்பரியத் திருவிழா, தெலங்கானா மட்டுமல்லாது, ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

போனாலு திருவிழாவின் வரலாற்றுப் பின்னணியை அறிய வேண்டுமென்றால், நாம் சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஆறு நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில், தெலுங்கு தேச மண்ணில், இந்த விழா, முதன்முதலாக கொண்டாடப்பட்டதாக, புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

15ஆம் நூற்றாண்டில், ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால், எடு கொல்லா எல்லம்மா நவதட்டி கோயில் கட்டப்பட்டு, போனாலு திருவிழா, துவக்கி வைக்கப்பட்டது. 1676ஆம் ஆண்டில், கரீம்நகர் ஹஸ்னாபாத் பகுதியில், நடைபெற்ற விழாவில், முதல்முதலாக, பெண் தெய்வம் வைத்து வழிபடப்பட்டதாக, கைஃபியதுலு கௌடநடுலு என்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஹைதராபாத் நகரத்திற்கும், போனாலு திருவிழாவிற்கும், வரலாற்றுத் தொடர்பு உள்ளது. 1869ஆம் ஆண்டு, இரட்டை நகரங்களில், பிளேக் எனும் கொள்ளை நோய், மிக வேகமாகப் பரவியது. இந்த கொள்ளை நோய் தாக்குதலில் சிக்கி, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த அகோர கொள்ளை நோயில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, கிராம தெய்வங்களிடம், மக்கள் சரணடைந்தனர்.

கிராம தெய்வங்களின் கோபத்தினால் தான், இந்த கொள்ளை நோய் உண்டானதாகக் கருதி, மக்கள், போனாலு திருவிழாவைக் கொண்டாடத் துவங்கினர். 1675ஆம் ஆண்டு, லபுல் ஹஸன் குதுப் ஷா ( தனிஷா) ஆட்சிக்காலத்தில், ஹைதராபாத் நகரத்தில் போனம் திருவிழா கொண்டாடப்பட்டதன் குறிப்புகள் இருப்பதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கலாசார மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் மட்டுமல்லாது, போனாலு திருவிழாவிற்கு, பருவகால நோய்களை தடுப்பதில் முக்கியப் பங்கு உள்ளதாக, மக்கள் நம்புகின்றனர். மழைக்காலங்களில், மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் அதிகமாக பரவுகின்றன.

இந்த நோய்கள் ஏற்பட காரணமான பூச்சிகளை விரட்டும் பண்பு வேப்பிலைக்கு அதிக அளவில் உள்ளது. போனாலு திருவிழாவின் போது, பெண்கள் வேம்பு வளைவுகளை வீட்டிலேயே வளர்த்து, வேப்பிலைகளால் ஆன பிரசாதத்தை பெண்கள் படைக்கின்றனர்.

இதன்மூலம், தாங்கள் நோய் நொடியின்றி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. போனாலு திருவிழாவின் போது, மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. இது அவர்களின் நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.

ஹைதராபாத் நகரத்தின் கலாசார கட்டமைப்பின் ஒருங்கிணைந்த நிகழ்வாக, போனாலு திருவிழா விளங்கி வருகிறது. பாக்யநகர் (ஹைதராபாத்) நகரத்தில் அமைந்து உள்ள கிராம தெய்வங்களுக்காக அமைக்கப்பட்டு உள்ள பல்வேறு கோயில்கள், இந்த போனாலு திருவிழாவில் பங்கேற்கின்றன. இந்த பாரம்பரிய திருவிழா, கோல்கொண்டா கோட்டையில் உள்ள ஜகதாம்பா மகாகாளி கோயிலில் துவங்கி, பின் செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைய்னி மகாகாளி கோயில், லால்தர்வாஜா பகுதியில் உள்ள சிம்மவாஹினி மகாகாளி அம்மாவாரி கோயிலில், விழா நிறைவடைகிறது.

தெய்வீக சக்தியின் திருவுருவமான ஜகதம்பா மகான்காளிக்கு பொன்னாடை சமர்ப்பிப்பதன் மூலம், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றி, ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி அடைவதாக வழிபடுபவர்கள் நம்புவதால், ஆஷாடம் மாதத்தில் (ஜூன் -ஜூலை) போனாலு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

லால் தர்வாசாவில் போனாலு திருவிழாவின் பிரமாண்டமான இறுதிக்காட்சி நடக்கிறது. அங்கு தேவி மகான்காளி ஆதிபராசக்தியாக போற்றப்படுகிறாள், அவளுடைய பக்தர்களுக்கு சக்தி மற்றும் ஆறுதல் ஆகியவற்றின் இறுதி ஆதாரம் ஆக விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்த பிரமிக்க வைக்கும் திருவிழாவைக் காணவும் பங்கேற்பதற்காகவும் தொலைதூரங்களில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Leo first look: லியோன்னா சிங்கம் தானே... கழுதைப்புலி இருக்கு - என்ன சொல்ல வருகிறது லியோ ஃபர்ஸ்ட் லுக்!

Last Updated :Jun 22, 2023, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.