ETV Bharat / bharat

இந்தியா கூட்டணி - ஜக்கிய ஜனதா தளம் இடையே எந்த விரிசலும் இல்லை..! நிதிஷ் குமார் விளக்கம்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 8:44 PM IST

Nitish Kumar: இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டத்தில் பங்கேற்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளால் கோபம் கொண்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறான கருத்து என மறுத்துள்ளார்.

Bihar CM Nitish Kumar denied reports of a rift between the JDU and the alliance
நிதிஷ் குமார்

பாட்னா (பீகார்): நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றுகூடி 'இந்தியா' (I.N.D.I.A) என்ற ஒரு கூட்டணியாகக் களம் காண உள்ளனர். இந்தியா கூட்டணியின் முதல் மூன்று கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் கடந்த 19ஆம் தேதி டெல்லியில் நான்காவது கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் மற்றும் சீட் பகிர்வு போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. முன்னதாக ஐந்து மாநிலத் தேர்தல் முடியும் வரை இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் பெருமளவில் தலையீடு செலுத்தாமல் இருந்து வந்தது இந்தியா கூட்டணித் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் முனைப்புக் காட்டி வருகிறது. கடந்த 19ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணியிலிருக்கும் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் மற்றும் சீட் பகிர்வு குறித்த விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சில தலைவர்கள் ஆதரவுத் தெரிவித்து இருந்தனர். ஆனால் முதலில் வெற்றி பின்னரே வேட்பாளர் தீர்மானம் என மல்லிகார்ஜுன கார்கே தட்டிக்களித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவாதத்தில் பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமார் கோபமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இந்த கருத்துக்கள் முற்றிலும் தவறான கருத்து என மறுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியும் ஐக்கிய ஜனதா தளமும் ஒன்றிணைந்து செயல்படும் என நிதீஷ் குமார் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறுகையில், “டிச.19ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகளால் நான் கோபமடைந்தேன் என்று வெளிவரும் செய்திகள் முற்றிலும் தவறான கருத்து. கூட்டணியின் தீர்மானங்கள் குறித்து எனக்கு எந்த கோபமும் இல்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

கூட்டணி யாரை வேண்டுமானாலும் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கட்டும் என்று கூட்டத்திலே நாங்கள் கூறிவிட்டோம். நாங்கள் சீட் பகிர்வு குறித்து முன்கூட்டியே முடிவெடுக்குமாறு தான் இந்தியா கூட்டணிக்குக் கோரிக்கை விடுத்தோம். இதைத்தவிர்த்து கூட்டணிக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்குமான உறவில் எந்த விரிசலும் இல்லை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவைத் தோற்கடிக்க நாடு முழுவதும் ஒத்த கருத்துடன் செயல்படும் இந்தியா கூட்டணியுடன், ஐக்கிய ஜனதா தளம் முழு ஒத்துழைப்புடன் செயல்படும். கூட்டணிகளுக்கிடையே பிரச்சனை எனக்கூறுவது தேவையற்றப் பேச்சுக்கள். வரும் தேர்தலுக்காக ஐக்கிய ஜனதா தளம் கடுமையாக உழைத்து வருகிறது. எவராலும் இந்தக்கட்சியை உடைக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திராவிட மாடலா..? திண்டாடும் மாடலா..? - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.