ETV Bharat / bharat

சட்டம்லாம் மக்களுக்குத்தான் எங்களுக்கு இல்லை: பாஜக எம்.எல்.ஏவின் கூத்து

author img

By

Published : Apr 11, 2020, 4:29 PM IST

பெங்களூரு: ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தனது பிறந்தநாளை கோலாகலமாக பாஜக எம்.எல்.ஏ. கொண்டாடியுள்ளார்.

No lockdown for lawmakers; BJP MLA celebrated his birthday lavishly in Karnataka
No lockdown for lawmakers; BJP MLA celebrated his birthday lavishly in Karnataka

கரோனாவால் ஒட்டுமொத்த இந்தியாவே முடங்கி கிடக்கிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று கூறி நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டத்திலிருக்கும் கரோனா மூன்றாம் கட்டமான சமூகப் பரவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக மக்கள் பொது இடங்களில் கூடக்கூடாது, விழாக்கள் நடத்தக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றன. ஆனாலும் உத்தரவை மதிக்காமல் இளைஞர்கள், இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்து கொண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் அலட்சியமாக இருக்கின்றனர்.

எம்எல்ஏவின் கோலாகல பர்த்டே செலிபிரேசன்
எம்எல்ஏவின் கோலாகல பர்த்டே செலிபிரேசன்

இது ஒருபுறம் என்றால் மக்கள் பிரதிநிதிகளோ ஒருபடி மேலே சென்று, ஊரடங்கை ஒரு பொருட்டாக மதிக்காமல் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகின்றனர். அப்படியானதொரு தரமான சம்பவத்தைதான் அரங்கேற்றியுள்ளார் கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ.

கர்நாடகாவில் ஆளும் அரசான பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் மசாலா ஜெயராம். இவருக்கு நேற்று 51ஆவது பிறந்தநாள். பொதுவாகவே அரசியல் பிரமுகர்களின் பிறந்தநாள் என்றாலே ஜாம் ஜாமென்று கொண்டாடப்படும். அரசியல்வாதியின் ஆதரவாளர்களுக்கு பிரியாணி, மது என தடபுடலாக விருந்துகள் படைக்கப்படுவதும் வழக்கமானதே. அதேபோலவே ஜெயராமும் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட எண்ணியுள்ளார்.

என்ன ஒன்று கரோனா ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இந்தவேளையில் அவர் கொண்டாடியதுதான் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும், தான் இருக்கும் கட்சியின் உத்தரவை மதிக்காமல் இதுபோல அவர் செய்தது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதரணமாக 10 பேரை மட்டும் வரவழைத்து கொண்டாடாமல், அவரின் இல்லத்தில் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுக்கு பிரியாணி சமைத்துப் போட்டு பிரமாண்டமாக செலிபிரேட் செய்துள்ளார்.

எம்எல்ஏவின் கோலாகல பர்த்டே செலிபிரேசன்

சமூக விலகல், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என நொடிக்கு நொடிக்கு மருத்துவர்கள், அரசுகள் என அனைத்து தரப்பினரும் கத்திக்கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில், அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் இவ்வாறு அவர் நடந்துகொண்டது கடும் கண்டனங்களை சந்தித்துள்ளது.

மக்களுக்கு அறிவுரை கூறும் இடத்தில் இருந்துகொண்டு, அம்மக்கள் அவருக்கு அறிவுரை கூறும் வகையில் செயற்கரிய செயலை செய்துள்ளார் மசாலா ஜெயராம். அதுமட்டுமின்றி, சட்டம் இயற்றுபவர்களே அச்சட்டத்தை மீறும் வகையில் நடந்துகொள்வது பெரும் அபத்தம் என சமூக செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.