ETV Bharat / bharat

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரிப்பு - தேசிய பெண்கள் ஆணையம்

author img

By

Published : Jul 3, 2020, 5:12 PM IST

NCW
NCW

டெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவு அதிக புகார்களை தேசிய பெண்கள் ஆணையம் பெற்றுள்ளது.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதற்கேற்ப கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் மட்டும், பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்து 2,043 புகார்களைப் பெற்றுள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் பெறப்பட்ட புகார்களில் 452 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பானவை; மேலும், பெண்களை உளவியல் ரீதியாகவும், மன ரிதீயாகவும் கொடுமைப்படுத்துவது தொடர்பாக 603 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2,379 புகார்களை தேசிய பெண்கள் ஆணையம் பெற்றிருந்தது. அதற்கு பின் இவ்வளவு அதிகமான புகார்களை தேசிய பெண்கள் ஆணையம் பெறுவது இதுவே முதல்முறை.

இது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், "நாங்கள் இப்போது சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதாலேயே அதிக புகார்களைப் பெற முடிகிறது. நாங்கள் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்கள் வாயிலாகவும் புகார்களை பெறுகிறோம்.

இப்போது வாட்ஸ்அப் மூலமும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்கலாம். நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம், இதனாலேயே அவர்கள் எங்களை அதிகளவில் நம்புகின்றனர்"என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெண்கள் தங்களின் பிரச்னை குறித்து எவ்வாறு எங்களிடம் புகாரளிக்கலாம் என்று தூர்தர்ஷனில் நாங்கள் விளம்பரம் செய்தோம். மேலும், எங்கள் அவசரகால வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணையும் வழங்கினோம். இது பெண்கள் எங்களை அணுக எளிதான வழியாகும். புகார்கள் அதிகமாக பெறப்பட்டதற்கு இதுவே காரணம்" என்றார்.

திருமணமான பெண்களை துன்புறுத்துதல், வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல் ஆகியவற்றின் கீழ் 252 புகார்களும், பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக 194 புகார்களும் பெறப்பட்டுள்ளன. அதேபோல, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 113 புகார்களும், சைபர் குற்றம் தொடர்பாக 100 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

முன்னதாக, மே மாதம் 1,500 புகார்கள், ஏப்ரல் மாதம் 800 புகார்கள் மட்டுமே தேசிய பெண்கள் ஆணையம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: 'மறமானம் மாண்ட...' - திருக்குறளை மேற்கோள்காட்டிய மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.