ETV Bharat / bharat

'எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' - ராஜ்நாத் சிங்

author img

By

Published : Sep 17, 2020, 5:43 PM IST

எல்லை விவகாரத்தில் இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா மதித்து நடக்கவில்லை. லடாக்கில் எல்லைக்கோட்டை மாற்ற முயற்சி செய்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினார்.

Rajnath Singh on India China faceoff
Rajnath Singh on India-China faceoff

டெல்லி: மே மாதம் முதல் லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக நான்கு மாதங்களாக இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

செப்டம்பர் 4ஆம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கியும் சந்தித்துப் பேசினர். அப்போது லடாக் எல்லை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினர். அப்போது எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பின்னணியில், இந்திய, சீன எல்லை பிரச்னை குறித்து மக்களவையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (செப்டம்பர் 16) விரிவான விளக்கம் அளித்தார்.

அவர் பேசுகையில், “எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இதுவரை சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. எல்லை விவகாரத்தில் சீனா முரண்பட்டு நிற்கிறது. லடாக்கில் சுமார் 38 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. 1963ஆம் ஆண்டு சீனா, பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பரப்பளவையும் சீனா ஆக்கிரமித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளிலும், உட்பகுதிகளிலும் சீன ராணுவ வீரர்களும் ராணுவ தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளன. கோக்ரா, கோங்கா லா, பான்காங் ஏரி வடக்கு, தெற்கு கரைப் பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது. ஜூன் 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் சீன ராணுவ தரப்பில் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன். இந்திய வீரர்களின் வீரத்துக்கு ஈடு இணையே கிடையாது. ராணுவத்துக்கு பின்னால் ஒட்டுமொத்த நாடும் ஓரணியில் திரண்டு நிற்கிறது. எல்லையில் இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால் இருதரப்பு ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளை சீனா மதித்து நடப்பதாக தெரியவில்லை.

கடந்த 1993, 1996ஆம் ஆண்டுகளில் சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி எல்லையில் வீரர்களை குவிக்கக் கூடாது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி சீனா செயல்படுகிறது. ஒருதலைப்பட்சமாக எல்லைக்கோட்டை மாற்ற சீனா முயற்சி செய்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சீன வீரர்களின் ஊருடுவல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுத்து நிறுத்திவருகிறது.

எல்லையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை பொறுத்தே இருநாடுகளின் உறவு அமையும். இந்திய ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆதரவாக மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.