ETV Bharat / bharat

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு எதிராக இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jun 3, 2020, 2:50 PM IST

கொல்கத்தா : காவல் துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்திற்கு எதிராகவும், அமெரிக்காவில் நடைபெறும் இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராகவும் இடதுசாரி அமைப்பினர் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்
ஜார்ஜ் ஃப்ளாய்ட்

அமெரிக்காவில், மினிசோட்டா மாநிலத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஆப்பிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணம் அமெரிக்கா முழுவதும் பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்கள் தொடங்கி, உலகம் முழுவதும் இப்படுகொலைக்கு எதிராக பல்வேறு கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்திற்கு எதிரே இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) உறுப்பினர்கள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவாதத் தாக்குதல்களை நாங்கள் எதிர்க்கிறோம்" என்ற பதாகைகளுடன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இந்த மாணவர், இளைஞர் அமைப்பினர் நகரின் மையத்தில் உள்ள சௌரிங்கீ பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், கறுப்பின மக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி, கொலையில் தொடர்புடைய காவல் துறையினருக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்தனர்.

மேலும், கறுப்பின, சிறுபான்மையினருக்கு ஆதரவாக அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பதாகைகளைத் தாங்கி நின்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்ததாகவும், இதில் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

46 வயதான ஃப்ளாய்ட் இறந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் குறைந்தது 140 நகரங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.