ETV Bharat / bharat

கேரளா நிலச்சரிவு: உயிரிழப்பு 50ஆக உயர்வு!

author img

By

Published : Aug 11, 2020, 1:01 PM IST

இடுக்கி: கேரளாவின் ராஜமலையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.

கேரளா நிலச்சரிவு: உயிரிழப்பு 50ஆக உயர்வு!
கேரளா நிலச்சரிவு: உயிரிழப்பு 50ஆக உயர்வு!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கனமழையால், ஆகஸ்ட் 7ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் தொழிலாளர் குடியிருப்பு முகாமில் தங்கியிருந்த 80க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிக்கினார்கள்.

இவர்களை மீட்கும் பணியில், தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர், கேரள காவல்துறை, தீயணைப்புத்துறை, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கடந்த ஐந்து நாள்களாக ஈடுபட்டுவருகின்றனர்.

தேயிலைத் தோட்ட அமைப்புகள், உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்தினருடன் இணைந்து காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்துவருகிறது.

ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் மீட்புப்பணி நடைபெற்றுவரும் சூழலில், மண்ணிற்கு அடியில் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அலுவலர்கள் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர்.

இச்சூழலில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவு ஏற்பட்ட பெட்டிமுடி பகுதி தேயிலைத் தோட்டங்களில் தங்கி, பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

இதில் 55 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் போனதால், அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். கயத்தாரில் இருந்து 40 பேர் உடனடியாக இ-பாஸ் பெற்று கேரளா விரைந்துள்ளனர்.

சின்னாறு சோதனைச்சாவடியில் கேரள காவல் துறையினர் அனுமதிக்க மறுப்பதாகவும், கரோனாவைக் காரணம் காட்டி, உறவினர்கள் செல்லும் முன் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது எனவும் உறவினர்கள் கோருகின்றனர்.

இந்நிலையில், மீட்புப்பணி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர், கூடுதலாக இரண்டு தேசியப் பேரிடர் மீட்புக்குழுவை வரவழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க....மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சி கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.