ETV Bharat / bharat

தாராவியில் கரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ சங்கம் கையாளும் புதிய உத்தி!

author img

By

Published : Apr 26, 2020, 4:18 PM IST

Updated : Apr 26, 2020, 5:35 PM IST

மும்பை : தாராவியில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அங்கு வாழ்ந்துவரும் மக்களிடையே கோவிட்-19 பெருந்தொற்றை கண்டறியும் சோதனையை நடத்த இந்திய மருத்துவ சங்கத்தின் உதவியுடன் மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Indian Medical Association's new strategy to control corona in tharavi
தாராவியில் கரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ சங்கம் கையாளும் புதிய உத்தி!

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் இந்தியாவை ஆட்டம் காண செய்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. நாளுக்குநாள் இதன் பாதிப்பு எண்ணிக்கை அங்கே தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனிடையே, உலகின் மிகப் பெரிய குடிசை பகுதியான தாராவியில் கோவிட்-19 வைரஸால் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

இட நெருக்கடி அதிகமுள்ள தாராவி பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் உயரும் என மகாராஷ்டிரா அரசு அச்சப்படுகிறது. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தாராவியில் குடியிருப்போருக்கு கோவிட்-19 பெருந்தொற்று கண்டறிதல் பரிசோதனையை நடத்த சிறப்பு திட்டம் ஒன்றை திட்டமிட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக தெர்மல்-ஸ்கிரீனிங்கிற்காக சென்று கொண்டிருக்கின்றனர். இந்த வழிமுறை போதிய பலனைத் தராத நிலையில், புதிய வடிவில் 100-க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களை உருவாக்கி அவற்றின் மூலமாக விரைந்து இந்த பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதனை மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் தலைவர் மருத்துவர் சிவ்குமார் உத்துர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாராவியின் வீதிகள் மிகச் சிறியவை, அங்கே மருத்துவர்கள் 6 முதல் 7 மணி நேரம் வரை பி.பி.இ கிட் அணிந்து தெருக்களில் சுற்றி வருவது மருத்துவர்களுக்கு சுகாதார பிரச்னையை உருவாக்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வீடு வீடாக பரிசோதனை செய்வதை நிறுத்திவிட்டு, முகாம்கள் அமைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முகாம்கள் தொடங்க மருத்துவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவர்களுக்கு பி.பி.இ கிட்கள் உள்ளிட்ட பிற தேவையான தற்காப்பு உபகரணங்கள் நகராட்சியால் வழங்கப்படும். காய்ச்சல், சளி, இருமல் நோயாளிகள் தனித்தனியாக பரிசோதிக்கப்படுவார்கள், மற்ற நோயாளிகள் தனித்தனியாக பரிசோதிக்கப்படுவார்கள். சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Medical Association's new strategy to control corona in tharavi
தாராவியில் கரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ சங்கம் கையாளும் புதிய உத்தி!

ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை முகுந்த நகர், முஸ்லீம் நகர், பாலிக நகர், சோஷியல் நகர், காமராஜ் நகர், கோலிவாடா பகுதிகளில் 40,000 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், தொற்று அறிகுறி தென்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : கரோனா சூழல்: தாராவியிலிருக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திட்டம்!

Last Updated : Apr 26, 2020, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.