ETV Bharat / bharat

'இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் தற்போதைக்கு சாத்தியமில்லை' - நிபுணர்கள் கருத்து

author img

By

Published : Jul 18, 2020, 1:36 PM IST

Updated : Jul 18, 2020, 2:57 PM IST

India-EU free trade agreement
India-EU free trade agreement

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்றாலும், தற்போதைக்கு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது சாத்தியமற்ற ஒன்று என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவும் 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும், கடந்த புதன்கிழமை தங்களது உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளும் வகையில், ஐந்தாண்டுக்கான திட்ட வரைவுகளை வெளியிட்டன. இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்த ஒரு உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை அமைக்கவும் முடிவு செய்தன.

டெல்லி: இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றால், அது இரு தரப்பினரிடையேயான தாராள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும். ஆனால், அந்த ஒப்பந்தம் செய்வதற்கான நடவடிக்கை தாமதமாகிக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில் அது பலனளிக்காமல் போய்விடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை முந்திக்கொண்ட வியட்நாம்

ஆசிய நாடுகளான இந்தியாவும் வியட்நாமும் லாபம் கொழிக்கும் ஐரோப்பிய சந்தையை அணுகுவதற்காகப் போட்டியிட்டுவந்த சூழலில், வியட்நாம் முந்திக்கொண்டது. அந்நாடு கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இந்தியாவிற்குப் பாதகமாக அமைந்துள்ளது.

இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பிரதமர் கூறியவை என்ன?

கடந்த ஜூலை 15ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற 15ஆவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் இரு தரப்பு வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒத்துழைப்பை மறுஆய்வு செய்தனர்.

உச்சி மாநாட்டைத் தொடர்ந்து ஊடகங்களிடம் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் மேலைநாடுகளுக்கான செயலர் விகாஸ் ஸ்வரூப் உரையாற்றினார். அதில், ”வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இது உச்சி மாநாட்டினால் விளைந்த மிக முக்கியமான பயன். இதில், அனைத்து வர்த்தகம், சந்தைப் பிரச்னைகள், விநியோகச் சங்கிலி இணைப்புகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இரு நாட்டுத் தலைவர்களும் கோவிட்-19க்கு பிந்தைய பொருளாதார மீட்பு முன்னுரிமைகள், விநியோகச் சங்கிலி இணைப்புகளை பன்மைப்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கான முழுத் திறனை உணர்ந்துகொள்வதற்கு வலுவான முக்கியத்துவம் அளித்தல் ஆகியன குறித்தும் மேலும், இரு தரப்பு வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பதில் நாம் எதிர்பார்க்கும் முன்னுரிமையைப் பற்றியும் ஒழுங்குமுறைச் சூழலைத் தாராளமயமாக்குவதற்கும், அதன்மூலம் வணிகத்தை எளிதாக்குவதற்கும் இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பிரதமர் மோடி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களிடம் எடுத்துரைத்தார்.

இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஐரோப்பிய வணிக நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பதற்காக ஆத்ம நிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா திட்டம்) தொடங்கப்பட்டது எனவும் அவர் கூறினார்” என்று பேசினார் ஸ்வரூப்.

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான வர்த்தகக் கூட்டு எத்தகையது?

வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, எவ்வாறு ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருந்ததோ, அதேபோலத்தான் இந்தியாவும் ஐரோபாவின் வர்த்தகக் கூட்டாளியாக இருந்தது. 2018ஆம் ஆண்டில் ஒன்பதாவது பெரிய வர்த்தக பங்குதாரராக இந்தியா இருந்தது.

2018-19ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் ஏற்றுமதி 5 ஆயிரத்து 717 கோடி டாலராகவும், இறக்குமதி 5 ஆயிரத்து 842 கோடி டாலராகவும் இருந்தது. மொத்தமாக இருதரப்பு வர்த்தகம் 11 ஆயிரத்து 560 கோடி டாலராக இருந்தது. இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நான்காவது பெரிய ஏற்றுமதியாளராகவும், ஆறாவது பெரிய இறக்குமதியாளராகவும் இருக்கிறது.

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டில் ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய ஆதாரமாகும். 2000ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு மொத்தம் 9 ஆயிரத்து 70 கோடி டாலராக இருந்தது. இது இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 24 விழுக்காடாகும்.

டெல்லியில் தொடங்கப்பட்ட ஐரோப்பிய முதலீட்டு வங்கி

ஐரோப்பிய முதலீட்டு வங்கி தனது அலுவலகத்தை டெல்லியில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி, இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கான கடன்களை வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் முதலீடுகள் 5 ஆயிரம் கோடி யூரோக்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் மீறி, பரந்த அடிப்படையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (BTIA) என அழைக்கப்படும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் 2007ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

அனைத்து இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களையும் கைவிட்ட இந்தியா

இந்தியா அனைத்து நாடுகளுடனான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை (BIT) கைவிட்ட பிறகு, ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் தற்போது பாதுகாப்பானதாக இருக்காது என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய இருதரப்பு முதலீட்டு மாதிரியைத் தொடர்ந்து இந்தியா அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தியுள்ளது.

28 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முதலீட்டு பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளின் பொறுப்பை ஒன்றியத்திடம் வழங்கின. பிரெக்ஸிட் காரணமாக இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக உறவுகளில் நிச்சயமற்ற தன்மை இருப்பதாகவும், மாறிவரும் பொருளாதார உறவுகளின் பன்முகத்தன்மை காரணமாக பங்கு முதலீட்டு பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்ன சொல்கிறார் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் நிர்வாக இயக்குநர்?

ஈடிவி பாரத்திடம் பேசிய இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் (FIEO) நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான அஜய் சஹாய், ”வாகனங்கள், வாகன பாகங்கள் இறக்குமதி, ஒயின், பால் பொருள்கள் இறக்குமதி, தரவு பாதுகாப்பு காரணி போன்ற பிரச்னைகள் காரணமாக இந்திய-ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏற்றுமதி அமைப்பாக, நாங்கள் அனைவரும் தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்காகக் காத்திருக்கிறோம். ஆனால், இவை அனைத்தும் ஒவ்வொரு தரப்பும் எவ்வளவு ஒத்துழைப்பு அளிக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். இரு தரப்பினரும் சீரான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் தலைவர் குல்ஷன் சச்தேவா கூறுகையில், ”இந்தியாவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக இருந்துவரும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவிருப்பதால், இந்தியா வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை வேறுவிதமாக அணுக வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இங்கிலாந்து எந்த வகையான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதன் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் அகதிகள் பிரச்னை, ஐரோப்பிய பொருளாதாரம் போன்றவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

ஜூலை 15ஆம் தேதி நடைபெற்ற உச்சிமாநாட்டைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருந்தாலும், அது வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடக்கம் செய்வதற்கான வழிமுறையைப் பற்றி மட்டுமே விவாதிக்கும். அதனால்தான் இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் ஒரு எதார்த்தமாக மாற வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

வியட்நாமுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் யாவை?

இந்த ஆண்டு ஜூன் மாதம் வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததன் காரணமாக, இந்தியா மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது என்றும் சஹாய் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய ஒன்றியம்-வியட்நாம் தாராள வர்த்தக ஒப்பந்தம் என்பது, சிங்கப்பூருக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு நாட்டிற்கும் இடையிலான இரண்டாவது தாராள வர்த்தக ஒப்பந்தம் ஆகும். இந்தியாவும் வியட்நாமும் ஐரோப்பிய சந்தையை அணுகுவதற்கு போட்டியிடுகின்றன என்று சஹாய் கூறினார்.

ஐரோப்பிய சந்தையை அணுகுவதில் வியட்நாம் முந்திக்கொண்டதால், ஆடைகள், காலணிகள், தோல் பொருள்கள், மரச் சாமான்கள், கடல் பொருள்கள், குறிப்பிட்ட விவசாயப் பொருள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஐரோப்பிய சந்தையில் வியட்நாம் எளிதில் அணுகலாம். இதனால் அந்நாட்டிற்குப் பொருளாதார நன்மை கிடைக்கும் என்றும் சஹாய் கூறினார்.

Last Updated :Jul 18, 2020, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.