ETV Bharat / bharat

சர்ச்சையை கிளப்பிய பாஜகவின் தேர்தல் வாக்குறுதி: விளக்கமளித்த மத்திய அமைச்சர்!

author img

By

Published : Oct 23, 2020, 12:29 PM IST

பாட்னா: கரோனா தடுப்பூசி குறித்த பாஜகவின் தேர்தல் வாக்குறுதி சட்டத்திற்கு உள்பட்டதுதான் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர்

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனை முன்னிட்டு, பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உலகமே கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்திருப்பது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

அப்போது, தேர்தல் நடைபெறும் வரை மற்ற மாநிலங்களில் தடுப்பூசி வழங்கப்படாதா என சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு விளக்கமளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சட்டத்திற்கு உட்பட்டே அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "போதுமான ஒப்புதல் பெற்றவுடன் பிகார் மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி வரலாற்று சிறப்புமிக்கது. சட்டத்திற்கு உட்பட்டது.

இந்த விவகாரத்தை சிலர் அரசியலாக்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். சுகாதாரம் தொடர்பான வாக்குறுதிகளை அளிக்கக் கூடாதா? இது சட்டத்திற்கு உட்பட்டதுதான். தேர்தலுக்கு முன்பு வாக்குறுதியை அளித்துவிட்டு அதனை நிறைவேற்றாதவர்களுக்கு மட்டுமே இது பிரச்னைக்குரியதாக உள்ளது. மக்களின் உடல்நலன் மீது நாங்கள் வைத்துள்ள அக்கறையே இதில் தெரிகிறது. கரோனா காலத்தில், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

எனவே, பிகார் மாநில பாஜகவுக்கும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது புரட்சிகர நடவடிக்கை" என்றார்.

இதையும் படிங்க: ஜேடியு-பாஜக கூட்டணி 15 ஆண்டுகளாக செய்தது என்ன? மோடியிடம் தேஜஸ்வி யாதவ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.