ETV Bharat / bharat

சிவசேனா - பாஜக கூட்டணியில் இழுபறி: அமித் ஷா பயணம் ரத்து!

author img

By

Published : Sep 25, 2019, 9:51 AM IST

மும்பை: சிவசேனா - பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவரும் நிலையில், அமித் ஷாவின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Amit Shah

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கூட்டணியை இறுதிசெய்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எஞ்சிய தொகுதிகளைக் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு வழங்குவது என்று ஏற்கனவே முடிவெடுத்துவிட்டன.

ஆனால், ஆளும் பாஜக தரப்போ கூட்டணி விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், சிவசேனாவை தவிக்கவிட்டுவருகிறது. தேர்தல் பரப்புரைக்காக கடந்த வாரம் மும்பை வந்த பாஜக தலைவர் அமித் ஷா, அக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாக நம்பப்படும் சிவசேனாவின் பெயரை ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவில்லை. இதன் காரணமாகவே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பது உறுதியாகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Uddhav Thackarey
Uddhav Thackarey

இதற்கிடையே, இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக நாளை மும்பை வரவிருந்த பாஜக தலைவர் அமித் ஷாவின் பயணங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர மாநில பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, கூட்டணி பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.

இதையும் படிங்க: சிவசேனாவை கழற்றிவிடும் பாஜக? மகாராஷ்டிராவில் 'தேர்தல்' மல்லுக்கட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.