ETV Bharat / bharat

தொடரும் அவலம்: உ.பி.-யில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை!

author img

By

Published : Aug 16, 2020, 1:40 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உபி-யில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை
உபி-யில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கேரி மாவட்டத்தின் இஷாநகரின் 13 வயது சிறுமி வெள்ளிக்கிழமை (ஆக. 14) முதல் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து, இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (ஆக. 15) சிறுமி உடல் கரும்புத்தோட்டத்தில் கிடப்பதாக காவல் துறைக்கும், சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாவட்டக் கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் கூறுகையில், 'சிறுமி பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது, உடற்கூறாய்வு முடிவில் தெரியவந்தது. இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட சந்தோஷ் யாதவ், சஞ்சய் கவுதம் ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மாவட்டக் கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார்

அதுமட்டுமின்றி அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) மற்றும் பிரிவு 376 (டி) (கும்பல்) ஆகியவற்றின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை கூறுகையில், 'நாங்கள் அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் அவளின் பிணத்தை தான் கரும்புத் தோட்டத்தில் கண்டோம். அதில் அவள் கண்கள் வெளியேறி, நாக்கு வெட்டப்பட்டு, துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தாள்' என வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து பகுஜன் சமாஜ் வாதி கட்சித் தலைவர் மாயாவதி, 'இந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், சமாஜ்வாதி கட்சியின் அரசாங்கத்திற்கும், தற்போதைய பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பீம் ராணுவத் தலைவர் சந்திர சேகர் ஆசாத் கூறுகையில், "பாஜக அரசாங்கத்தின் கீழ், பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. எங்கள் மகள்கள் பாதுகாப்பாக இல்லை. எங்கள் வீடுகள் பாதுகாப்பாக இல்லை, எல்லா இடங்களிலும் அச்சத்தின் சூழ்நிலை உள்ளது. அதனால், யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும்'' எனக் கூறினார்.

இதே போன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி, ஹப்பூர் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். தற்போது அந்தச் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல் துறையினர், கடந்த வெள்ளிக்கிழமை தான் (ஆக. 14) கைது செய்துள்ளனர். இதுபோன்று உ.பி.-யில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையளிக்கிறது.

இதையும் படிங்க...ஜஸ்கிரீமில் விஷம்;குடும்பத்தை தீர்த்துக்கட்ட நினைத்த இளைஞன் - கேரளாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.