ETV Bharat / bharat

சர்ச்சையில் சிக்கிய ஆந்திர முதலமைச்சர் - குறுகிய தொலைவுக்கு ஹெலிகாப்டர் பயணமா?

author img

By

Published : Jul 25, 2023, 8:03 AM IST

ஆந்திர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது சுற்றுப்பயணத்தின்போது ஹெலிகாப்டரில் பயணம் செய்து பொதுமக்களின் பணத்தை வீணடிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்கு உள்ளாகி உள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஹெலிகாப்டர்  பயணம்!
சர்ச்சைக்கு உள்ளாகி உள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஹெலிகாப்டர் பயணம்!

அமராவதி: ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநிலத்தில் அடிக்கடி ஹெலிகாப்டர் சுற்றுப்பயணம் செய்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினாலும், கீழே உள்ள சாலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்களை, முதலமைச்சர் கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல போக்குவரத்துக் கழக பேருந்துகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து வசதி இன்றி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்கவோ அல்லது அவரிடம் தங்கள் பிரச்னைகளைத் தெரிவிக்கவோ முடியவில்லை என்று அவரின் சில கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஜூலை 24) ஏழை மக்களுக்கு நிலங்களை வழங்குவதற்காக ஹெலிகாப்டரில் அமராவதி பகுதிக்கு வந்தார். "மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இந்த சூழலில், ஊழியர்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் கொடுக்க முடியாத நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்குச் செல்ல, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி வருகிறார். இதுபோன்ற ஹெலிகாப்டர் பயணங்களுக்கு அவர் தேவையில்லாமல் பெரும் தொகையைச் செலவிடுகிறார்" என அமராவதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தாடேபள்ளியில் இருந்து கிருஷ்ணாயபாலம் வந்து அங்கு நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தாடேபள்ளியில் இருந்து கிருஷ்ணாயபாலம் இடையே எட்டு கிலோ மீட்டர் தொலைவு. அதன்பின் அவர், கிருஷ்ணாய பாலத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கடபாலம் சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பின் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாடேபள்ளியில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பியதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

"அவர் பயணித்த மொத்த தூரத்தை கணக்கிட்டால், 30 கிலோ மீட்டர் கூட வரவில்லை. குறைந்த தூரம் பயணிக்க, முதலமைச்சர் ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார். இது மக்களின் பண விரயம் மட்டுமல்லாது, ஹெலிகாப்டர்கள் தரை இறங்குவதற்கு என இரண்டு ஹெலிபேடுகள் அமைக்கவும் மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நீண்ட நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மக்கள் மிகவும் அவதிப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க மக்கள் சில மைல்கள் தொலைவு நடந்து வரும் நிலையில், குறைந்த தொலைவில் உள்ள இடங்களுக்கு, முதலமைச்சரால் காரில் செல்ல முடியாதா என்று அமராவதியைச் சேர்ந்த மற்றொரு நபர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: ரூ.7 லட்சம் கோடிக்கும் மேலான பொதுக்கடனில் தமிழ்நாடு - மத்திய அரசின் தரவுகள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.