ETV Bharat / bharat

விபத்து ஏன்?: 'ரயில்வே நிர்வாகத்தின் குறைபாடுகளே காரணம்'.. அன்றே சொன்ன சிஏஜி அறிக்கை!

author img

By

Published : Jun 4, 2023, 9:55 PM IST

ரயில்வே நிர்வாகத்தில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளே, ரயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்படுவதற்கு காரணம் என, மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.

CAG
சிஏஜி

ஹைதராபாத்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. விபத்து நடந்து 48 மணி நேரத்துக்கு மேலாகியுள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (CAG) அறிக்கையில், ரயில் விபத்துக்களுக்கு பிறகு நடைபெறும் ஆய்வுக் குறைபாடுகள் முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பணியில் ஆள் பற்றாக்குறை இருப்பதும் மற்றொரு காரணம் என கூறப்பட்டது.

அதேபோல் சிஏஜி அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கு 2 பரிந்துரைகளை அளித்தது. விபத்து தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை தீவிரமாக உறுதி செய்வதுடன், உரிய கால அவகாசத்தை நியமிக்க வேண்டும் என்றும், தண்டவாள பராமரிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த சிஏஜி சுட்டிக்காட்டிய குறைபாடுகள் விவரம் வருமாறு:

* டிராக் ரெக்கார்டிங் கார்கள் மூலம் ரயில் தண்டவாளத்தின் வடிவியல் மற்றும் கட்டமைப்பு நிலைகளை ஆய்வு செய்யும் பணிகளில் 30 - 100 சதவீதம் வரை குறைபாடு உள்ளது.

* ரயில் வழித்தட பராமரிப்பு பணிகளை (TMS) ஆன்லைன் மூலமாக கண்காணிக்க முடியும். ஆனால் TMS கண்காணிப்பு நடைமுறை, ஒழுங்காக செயல்படவில்லை.

* கடந்த 2017 முதல் 2021 மார்ச் வரை பொறியியல் துறையின் குறைபாடு காரணமாக 422 ரயில் தடம் புரளும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தண்டவாளத்தை முறையாக பராமரிக்காததால் 171 முறையும் ரயில்கள் தடம் புரண்டுள்ளன.

* மெக்கானிக்கல் துறையின் குறைபாடு காரணமாக 182 முறை ரயில்கள் தடம் புரண்டுள்ளன.

* லோகோ பைலட்களின் தவறு காரணமாக 154 முறை ரயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளன. மோசமாக மற்றும் வேகமாக ரயிலை இயக்கியதே இதற்கு காரணம்.

* ஆபரேட்டிங் துறையின் தவறு காரணமாக 275 முறை ரயில்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன.

* ரயில் விபத்துக்கள் தொடர்பான 63 சதவீத சம்பவங்களில், இன்னும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. 49 சம்பவங்களில், அறிக்கையை ஏற்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் செய்துள்ளனர்.

* விதிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த உத்தரவுகள், பல்வேறு துறைகள் இடையேயான தொடர்பு, உரிய ஆய்வு ஆகியவற்றை முறையாக மேற்கொள்ளாததே பெரும்பாலும் ரயில் தடம் புரளும் சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றன.

* ரயில் தண்டவாளம் புனரமைப்பு பணிக்கு 2018 -19ம் ஆண்டில் ரூ.9607.65 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019-20ம் ஆண்டில் ரூ.7417 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதேபோல், தண்டவாள புனரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகையும், முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

இதையும் படிங்க: "கிரீன் சிக்னல் கிடைத்த பிறகே ரயிலை இயக்கினேன்" - கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.