ETV Bharat / bharat

17 மாநிலங்களில் அமலில் உள்ள 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்'

author img

By

Published : Mar 16, 2021, 7:22 AM IST

டெல்லி: மத்திய அரசின் ‘ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் 17 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி
One Nation

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதற்காக 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

தற்போது மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் 17 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தில் சமீபத்தில் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர், மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, உத்தரகாண்ட் ஆகியவை இணைக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை செயல்படுத்திய கடைசி மாநிலமாக உத்தரகாண்ட் உள்ளது. இத்திட்டத்தில் இணையும் மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி) 0.25 விழுக்காடு, கூடுதல் கடன் பெறத் தகுதியுடையவை எனக் கூறப்படுகிறது. அதன்படி, இந்த மாநிலங்களுக்கு கூடுதலாக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கிடைக்கப்பெறுகிறது.

இந்தத் திட்டமானது, அவ்வப்போது பணியிடங்களை மாற்றிக்கொள்ளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினசரி தொழிலாளர்கள், சாலையோர மக்கள், அமைப்புசாரா துறைகளில் தற்காலிக தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். இதன் மூலம் வேலை நிமித்தமாக புலம் பெயர்ந்து வசிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள எந்த ஒரு நியாய விலைக் கடையிலும் ‘ஸ்மார்ட் கார்டை’ பயன்படுத்தி ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 69 கோடி பேர் பயனடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், புலம்பெயர்ந்து வசிப்பவர்களின் வசதிக்காக ‘என் ரேஷன்’ என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை அடையாளம் காணவும் தங்களுக்கு என்னென்ன பொருள்கள் கிடைக்கும் என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். முதல்கட்டமாக இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, படிப்படியாக 14 மொழிகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: அடுத்தாண்டு நீட் தேர்வுகள் 2 முறை நடத்தப்படுமா? மத்திய கல்வித் துறை அமைச்சரின் பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.