ETV Bharat / bharat

14 Minutes Miracle : 14 நிமிடங்களில் சுத்தமாகும் வந்தே பாரத் ரயில்! அது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 2:27 PM IST

14 minutes miracle Scheme: 14 மினிட்ஸ் மிராக்கள் திட்டத்தின் மூலம், சென்னை - மைசூர் - சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் 14 நிமிடங்களில் சுத்தம் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் இரயிலை சுத்தம் செய்த பணியாளார்கள்
வந்தே பாரத் இரயிலை சுத்தம் செய்த பணியாளார்கள்

வந்தே பாரத் இரயிலை சுத்தம் செய்த பணியாளார்கள்

மைசூரு (கர்நாடகா): உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத்தை, நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்ட இந்த விரைவு ரயிலில் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மற்ற விரைவு ரயில்கள் தனது, அடுத்தப் பயணத்திற்கு புறப்படுவதற்கு அதிக நேர இடைவெளி எடுத்துக் கொள்ளும் நிலையில், வந்தே பாரத் ரயில் குறைவான நேர இடைவெளியில் மறுமார்க்கத்தில் சேவையை வழங்கி வருகிறது. அந்த குறைவான நேரத்தில் ரயில்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் அவசியமாக காணப்படுகிறது. இந்நிலையில் 14 மினிட்ஸ் மிராக்கள் (14 Minutes Miracle) என்ற திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.

சென்னை - மைசூரு - சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு 14 மினிட்ஸ் மிராக்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலை, 14 மினிட்ஸ் மிராக்கள் திட்டத்தின் மூலம் சரியாக 14 நிமிடங்களில் சுத்தம் செய்து முடிக்கப்பட்டது. முன்னதாக, வந்தே பாரத் ரயிலை சுத்தம் செய்வதற்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்புரவு பணி எவ்வாறு நடக்கிறது?: 14 மினிட்ஸ் மிராக்கள் திட்டத்தின் மூலம் ரயிலை சுத்தம் செய்வதற்கு, 48 பணியாளர்களும், 3 மேற்பார்வையாளர்களும் (Supervisors) நியமிக்கப்பட்டு உள்ளனர். மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் ரயில் பெட்டிக்குள் இருக்கும் குப்பைகளை அகற்றுதல், ஜன்னல் கண்ணாடியை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

2வது பணியாளர் குழு உணவு மேஜை மற்றும் இருக்கைகளை (Seats) சுத்தம் செய்கின்றனர். 3வது பணியாளர் குழு குப்பைத்தொட்டிகள், கழிப்பறை, கண்ணாடிகள் மற்றும் பெட்டியின் நுழைவு பகுதிகளை சுத்தம் செய்யும் பொறுப்பை கவனிக்கின்றனர். இவ்வாறு ரயிலை சுத்தம் செய்யும் பணி விரைவாக நடைபெறுகிறது.

வந்தே பாரத் ரயிலை 14 நிமிடத்தில் சுத்தம் செய்து முடித்தது குறித்து கூறிய ரயில்வே கோட்ட மேலாளர் ஷில்பி அகர்வால் கூறுகையில், "14 மினிட்ஸ் மிராக்கள் திட்டம், ரயில்களை சுத்தம் செய்யும் நிகழ்வை முறைப்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது. ரயில்கள் சரியான நேரத்திற்கு புறப்படுவதற்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். சென்னை - மைசூரு - சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலை சுத்தம் செய்வதற்கு முன்பெல்லாம், சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும்.

ஆனால் 14 மினிட்ஸ் மிராக்கள் திட்டத்தின் மூலம், 16 பெட்டிகளை வெறும் 14 நிமிடங்களிலேயே சுத்தம் செய்து முடிக்க முடிகிறது. ரயில் 14 நிமிடங்களில் புறப்படுவதற்கு ஏற்றார் போல் பணியாளர்களும் பணியாற்றுகிறார்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: மணிப்பூரில் மெய்தி, குக்கி, நாகா சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும்: நேதாஜி மருமகன் சுகதா போஸ் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.