ETV Bharat / state

“நான் ஏன் தென்காசி தொகுதியில் மீண்டும் மீண்டும் போட்டியிடுகிறேன்?” - கிருஷ்ணசாமி பிரத்யேக விளக்கம்! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 12:07 PM IST

Tenkasi Canditate Dr.Krishnasamy Campaign: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர்.கிருஷ்ணசாமி, திமுக குறித்து விமர்சித்து பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tenkasi Canditate Dr Krishnasamy Campaign
தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம்

டாக்டர் கிருஷ்ணசாமி

தென்காசி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுவதால், கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அதிமுக கூட்டணியில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் களம் காண்கிறார். இந்நிலையில், அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை புன்னையாபுரம், சொக்கம்பட்டி, கடையநல்லூர், இடைகால், கண்மணியாபுரம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள மகளிரிடம் குறைகளைக் கேட்டறிந்து, அதன் பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் மக்கள், பேருந்துகள் அப்பகுதிகளில் சரிவர நிறுத்தப்படுவதில்லை எனவும், மகளிர் உரிமைத்தொகை பாதி நபர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாகவும், தண்ணீர் பிரச்னை இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் கிருஷ்ணசாமி, ஆளும் கட்சியான திமுக அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதாகச் சொல்லி இருந்தது. அந்த தொகை உங்களுக்கு கிடைத்ததா?”

அப்போது, "திமுகவிற்கு வாக்களித்தால் ஓட்டு போடும் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. இந்தப் பகுதியில் நான் ஆறாவது முறையாக போட்டியிடுகிறேன். இந்தப் பகுதியில் பேருந்து நிறுத்தப்படுவதில்லை, தண்ணீர் வசதி இல்லை என பல குறைகளை நீங்கள் கூறியிருக்கிறீர்கள். நான் வெற்றி பெற்றால், இந்தப் பகுதியில் உள்ள குறைகள் கண்டிப்பாக தீர்க்கப்படும். மேலும், திமுக உங்களுக்கு 200 ரூபாய் கொடுத்து ஓட்டு போடச் சொல்வார்கள்.

அல்லது ஒரு வீட்டில் நான்கு ஓட்டு இருந்தால், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு கேட்பார்கள். அதற்கு சம்மதித்து நீங்கள் ஓட்டு போட்டால், உங்களின் குறைகள் அப்படியேத்தான் இருக்கும். திமுக எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி, பல்வேறு விதமான சூழ்ச்சிகள் மூலம் உங்களை ஓட்டு போட கட்டாயப்படுத்தினாலும் சரி, யார் உங்களுக்காக செய்வார்கள், யார் இந்த பகுதியில் நலத்திட்டங்களைக் கொண்டு வருவார்கள் என எண்ணிப் பார்த்து ஓட்டு போடுங்கள்" எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, பிரச்சாரம் முடிந்த பின்னர் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்த அவர், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். எங்களோடு கூட்டணி கட்சிகள் இணைந்து தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் இரவு, பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் கடந்த முறை இருந்த நாடாளுமன்ற வேட்பாளர், எந்த விதமான திட்டங்களையும் மக்களுக்காக செய்யவில்லை.

அதேபோல், இங்கு வேலை வாய்ப்புக்கான எந்த ஒரு வசதி, வாய்ப்புகளும் செய்யப்படவில்லை. நான் வெற்றி பெற்றால் இங்கு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். அதேபோல், வாக்களிக்கும் பொதுமக்களிடம் நான் கேட்டுக் கொள்வது, யார் உங்களுக்கு செய்வார்கள், யார் உங்களோடு நிற்பார்கள் என எண்ணிப் பார்த்து, வாக்களியுங்கள்.

நான் மறுபடியும் மறுபடியும் தென்காசி தொகுதியில் போட்டியிடுவது, இந்த பகுதியில் வளர்ச்சிப் பணிகளை செய்ய வேண்டும், மக்களுக்காக ஏதாவது பணிகளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான். ஆகையால், இம்முறை எனக்கு வாக்களியுங்கள்" என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: "ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி.. திமுக கூட்டணி தமிழ்நாடு முழுவதும் டெபாசிட் இழக்கும்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.