ETV Bharat / state

யார் இந்த ஆர்.சச்சிதானந்தம்? திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இவர் செய்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 6:54 PM IST

CPIM Madurai Lok Sabha Candidate R.Sachidanandam: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஆர்.சச்சிதானந்தம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஆர்.சச்சிதானந்தம் (53), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.எஸ்.சி பட்டதாரியாவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதில் 30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி உள்ளார்.

1987ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட துணைச் செயலாளராகவும், திண்டுக்கல் நகரத் தலைவராகவும் பணியாற்றியவர். 1992ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து, 1994-2002 வரை மாவட்டச் செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணைச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

2004-2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தாலுகா செயலாளராகவும், அதன் பின்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2007-2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்டச் செயலாளர், மாநில துணைச் செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

தனது 26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, 1996-2006 வரை இரண்டு முறை மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக பணியாற்றியுள்ளார். 2018ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இரத்ததான கழகத்தை உருவாக்கி செயல்படுத்தி இதுவரை 32 முறை இரத்ததானம் செய்துள்ளார். விவசாயச் சங்கத்தில் பணியாற்றிய காலத்தில், பழனி வட்டத்தில் உபரி நில மீட்பு போராட்டத்தை நடத்தியுள்ளார்.

கூடலூர், லந்தக்கோட்டை, கருங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களிலிருந்து சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு, கட்சியின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி உள்ளார். புலையன் இனத்தை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, கொடைக்கானல் துவங்கி சென்னை வரை அம்மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியுள்ளார்.

இவர் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் கிராமம் கட்டச்சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு எஸ்.கவிதா என்ற மனைவியும், ஆர்.எஸ்.வைசாலி (திருமணமானவர்), ஆர்.எஸ்.மிருணாளினி (10ஆம் வகுப்பு மாணவி) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.