ETV Bharat / state

அழைப்பு விடுக்கும் திமுக.. பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுக்கும் விசிக.. அதிருப்திக்கு காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 10:30 AM IST

DMK and VCK seat sharing: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்ட தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்க மறுப்பதால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக முரண்டு பிடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தொகுதி பங்கீடு
திமுக தொகுதி பங்கீடு

சென்னை: நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்ட நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்க வேலை செய்து வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க பெரும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றன. அதில் ஓரிரு மாநிலங்களில் வெற்றியும் கண்டுள்ளது. இதனால் இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் சிறுசிறு சலசலப்பு இருந்தாலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி பலமாக உள்ளது.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடும் இறுதி நிலையை எட்டியுள்ளது.

ஏற்கனவே கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள 37 தொகுதியில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால் இன்றைய தினமே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் இழுபறி ஏன்?: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, மதிமுக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் தலா மூன்று தொகுதிகளைக் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுக அதற்கு இசைவு தெரிவிக்காததால் இழுபறி நீடித்து வருகிறது.

விசிக அதிருப்தி: திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான விடுதலைச் சிறுத்தைகளுக்கு மாநிலம் முழுவதும் கணிசமான வாக்கு வங்கி உள்ளதால் இந்த தேர்தலில் குறைந்தது 3 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் 2 தனித் தொகுதிகளையும், ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்க வேண்டும் எனவும், தனிச் சின்னத்தில் போட்டி என திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

திமுக நிலைப்பாடு என்ன?: சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் இரண்டை தேர்வு செய்து கொள்ள விசிகவுக்கு திமுக தலைமை அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக முரண்டு பிடிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக அழுத்தம் திருத்தமாக விசிக தலைவர் திருமாவளவன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சர் கொடுத்த விளம்பரத்தில் சீன கொடி.. திமுகவின் தேசப்பற்று குறித்து பிரதமர் விமர்சனம்.. கனிமொழி ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.