ETV Bharat / state

'கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவின் சொத்து' - சீமான் பேச்சுக்கு விஜய பிரபாகரன் பதிலடி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 9:16 AM IST

vijaya prabhakaran: 'கொட்டும் முரசு சின்னம்' தேமுதிகவுக்கு மட்டுமே சொந்தம் என்று சீமான் பேச்சுக்கு தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

vijaya prabhakaran
விஜய பிரபாகரன்

விஜய பிரபாகரன் திருமண விழாவில் பேச்சு

திண்டுக்கல்: திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சீமான் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

திண்டுக்கல், வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில், தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்று (மார்ச் 11) வருகை தந்து தேமுதிக கொடியை ஏற்றி வைத்தார். இதில், வத்தலகுண்டு காளியம்மன் கோயில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னுத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த விஜய பிரபாகரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை பல்வேறு கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்சி சின்னத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன.

ஆனால், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முரசு சின்னம் குறித்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன், “திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே.

பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது. அண்ணன் சீமான் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்றது போல், தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு, தேமுதிக தொண்டர்களையும், பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடாது என்று கூறினார்.

மேலும் ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, சாதியைப் பார்த்து வாக்களிப்பது என்று இருந்து விடக்கூடாது. தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும். தமிழை மட்டுமே கற்றுக் கொண்டால், தமிழகத்தில் மட்டுமே இருக்க முடியும் எனத் தெரிவித்தார். தற்போதைய ஆட்சியாளர்கள் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவில்லை” என குற்றம்சாட்டினார். இந்த விழாவில் நகரம், ஒன்றியம், மாவட்ட பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சிஏஏ மூலம் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.