ETV Bharat / state

தலைமைப் பொறுப்பில் பெண்கள் நியமனம்.. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தடுத்த நகர்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 9:14 PM IST

Tamilaga Vettri Kazhagam: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மாநிலச் செயலாளராக பெண் நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணியின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் நியமனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணியின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் நியமனம்

சென்னை: நடிகர் விஜய் கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்நிலையில், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை அணிக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.

இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கட்சித் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு கீழ்க்கண்டவாறு இன்று நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

இதன்படி, உறுப்பினர் சேர்க்கை அணிக்கான மாநிலச் செயலாளராக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாநில இணைச் செயலாளராகவும் யாஸ்மின் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மாநிலப் பொருளாளராக சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், உறுப்பினர் சேர்க்கை அணிக்கான மாநில துணைச் செயலாளராக விஜய்அன்பன் கல்லணை என்பவரும், பிரபு என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய அணி, கட்சி உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கு கட்சித் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை.. வெளியான முக்கிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.