ETV Bharat / state

“தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை.. மக்களை நம்பியுள்ளோம்” - திருமாவளவன் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 3:43 PM IST

Updated : Mar 17, 2024, 3:56 PM IST

VCK Thirumavalavan: இந்தியத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. பாஜக கட்டுப்பாட்டில் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. மக்களை நம்பி களத்தில் உள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை

“தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை.. மக்களை நம்பியுள்ளோம்” - திருமாவளவன் குற்றச்சாட்டு!

சென்னை: பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (மார்ச் 16) நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக 7 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் மற்றும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், பாஜக கட்டுப்பாட்டில் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. மக்களை நம்பி களத்தில் உள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த முறை மார்ச் 10ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால்தான் தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளைத் தாமதமாக அறிவித்திருக்கிறது.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு 3 நாட்கள் இடைவெளி தான் உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணிகளை முடிவு செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒரு வாரக் கால இடைவெளி கூட தராமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 2 முதல் 7 கட்ட தேர்தலை நடத்துகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக, ஒரே நாளில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பில், அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டைக் குறி வைத்துத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்புகை சீட்டுகளை எண்ணித் தேர்தல் முடிவு அறிவிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கோரிக்கை வைத்தது. எதிர்க்கட்சிகள் விடுத்த பொதுமக்கள் கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் ஒரு பொருட்டா மதிக்கவில்லை. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கும் 7ம் கட்ட வாக்குப்பதிவுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.

தமிழ்நாட்டில், தேர்தல் வாக்குப்பதிவு தேதிக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 45 நாட்கள் இடைவெளிகள் இருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் 3 கட்டங்களாகத் தேர்தலை நடத்தி முடிக்க முடியும். கடந்த காலங்களில் ஒரே நாளில், நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இரண்டையும் சேர்த்து நடத்திய வரலாறு உண்டு.

ஒரு வட மாநிலத்தில் 7 கட்டமாகத் தேர்தல் நடத்துவது இன்னும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. மக்களை நம்பி களத்தில் இறங்குகிறோம். மக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு வர வேண்டும். வாக்காளர்கள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

தேர்தல் பத்திரத்தில் பாஜக தான் முன்னணியில் இருக்கிறது. ஒட்டுமொத்த வசூலில் 47 சதவீத நன்கொடை என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி கருப்புப் பணத்தை எல்லாம் வசூலித்து வைத்திருப்பது பாஜக. தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.6 ஆயிரம் கோடி என்றால் தேர்தல் பத்திரம் இல்லாமல் கருப்புப் பணம் எத்தனை ஆயிரம் கோடியாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்த இரண்டு நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: 'புதுச்சேரியில் வேட்பாளர்களிடம் ரூ.50 கோடி லஞ்சம் கேட்ட பாஜக' - நாராயணசாமி குற்றச்சாட்டு

Last Updated :Mar 17, 2024, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.