ETV Bharat / state

“திமுக உடன் கூட்டணிதான்.. காங்கிரஸ்-க்கு ஆதரவில்லை” - வேல்முருகன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 7:11 AM IST

TVK Velmurugan: திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி
வேல்முருகன்

வேல்முருகன்

தென்காசி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தென் மண்டலத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (பிப்.17) குற்றாலத்தில் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை திமுகவுடன் நடைபெறவில்லை. அப்படி நடைபெறும்பட்சத்தில் ஒரு பாராளுமன்றத் தொகுதியை கேட்டு பெறுவோம்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பெயர் ஆங்கில எழுத்துக்களில் டி.வி.கே (TVK) என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், டி.வி.கே (TVK) என ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்களிடையே குழப்பமான சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக கருத்துக்களைக் கேட்டு உரிய முடிவு எடுக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதிகூட பெற முடியாது. முன்பு போல் இல்லாமல், தற்போது பாஜக கிராமப்புறங்களில் நல்லதொரு வளர்ச்சியை பெற்று உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், அந்த கருத்துக்களின் உண்மைத் தன்மைகளை இளைஞர்கள் பகுத்தாய்வு செய்து பார்க்க வேண்டும்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் தாங்கள் கூட்டணியில் இருந்தாலும், இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. எனவே, இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில், அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள்.

அதேபோல், கேரளாவிற்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வது தொடர்பாக தமிழக அரசிற்கு அக்கறை இல்லை. ஆளுகின்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், தனது வளங்கள் வீணாகிக் கொண்டுள்ளன. காவேரி மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் ரீதியாக உரிய அழுத்தங்களைக் கொடுத்தும், நீதிமன்றம் சென்று உரிமையை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நான் பயப்பட மாட்டேன்.. ஜெயில் ஒன்றும் எனக்கு புதிதல்ல.. வைரலாகும் அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.