ETV Bharat / state

இளைஞர்களுக்கு குட் நியூஸ்.. திருச்சியில் புதிய ஐடி பார்க் திறப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 3:56 PM IST

Trichy IT Park: திருச்சி மாவட்டம், நவல்பட்டில் ரூபாய் 59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைக் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருச்சியில் புதிய ஐடி பார்க் திறப்பு
திருச்சியில் புதிய ஐடி பார்க் திறப்பு

திருச்சி: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் ரூ. 59.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.17) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பெருநகரமான சென்னையில் ஐடி துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் ஐடி துறை வளர்ந்து வருகிறது. குறிப்பாகக் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்கள் அதிகப்படியான ஐடி நிறுவனங்களை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில், திருச்சி நவல்பட்டு பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்டுப் பயன்பாட்டில் இருக்கும் எல்காட் (ELCOT) ஐடி பார்க்கில் விடார்ட் டெக்னாலஜிஸ், ஐ லிங்க் சிஸ்டம்ஸ், டிசாஸ்டர் ரெக்கவரி சென்டர், வூரம் டெக்னாலஜிஸ், வி.ஆர்.டெல்லா ஐடி சர்வீஸ், GI TECH GAMING போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிதாக 1.16 லட்சம் சதுர‌ அடி பரப்பளவில் புதிய ஐடி பார்க் கடந்த சில வருடங்களாகக் கட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்து இன்று திறக்கப்பட்டது. திருச்சி நவல்பட்டுப் பகுதியில் இருக்கும் எல்காட் ஐடி பார்க்கின் 2 வது கட்ட திட்டத்தில் 1.16 லட்சம் சதுர பரப்பளவில் புதிய ஐடி டவர் சுமார் ரூபாய் 59.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இன்று (பிப்.17) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு கட்டிட வளாகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வள்ளுவன், எல்காட் துணை மேலாளர் புவனேஸ்வரி, மெப்ஸ் நிறுவனத்தின் அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.