ETV Bharat / state

நாளை மறுநாள் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை.. கிளாம்பாக்கம் விவகாரத்தில் தமிழக அரசு வாதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 7:46 PM IST

Kilambakkam bus terminal issue: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனைய விவகாரத்தில் ஆம்னி பேருந்து சங்கங்களுடன் வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எட்டப்படும் முடிவுகளை பிப்ரவரி 7ஆம் தேதி தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் ஆம்னி உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்
கிளாம்பாக்கம் பேருந்து முனைய விவகாரம்

சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ஆம் தேதி போக்குவரத்துத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தனியார் பேருந்து நிறுவனங்கள், ஆம்னி பேருந்துகள் சங்கம் உள்ளிட்டவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று (பிப்.01) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கோயம்பேட்டில் உள்ள தங்களது ஷெட்கள் அமைந்துள்ள இடத்தில் காலிப் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும், மீண்டும் கிளாம்பாக்கத்திற்கு எடுத்துச் செல்லும்போது சென்னைக்குள்ளேயே குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். கோயம்பேடு முழுவதுமாக காலி செய்யப்பட்டு, வேறு பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாவதாவும், முழுமையாக மூடிவிட்டால் பேருந்து நிலையமே இல்லாத நகரமாக சென்னை மாறிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கோயம்பேட்டில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும் எனவும், மற்ற கோரிக்கைகள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உணவகங்கள், இலவச மருந்தகங்கள், பெண்களுக்கான பிரத்யேக வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தூரத்தை தவிர வேறு எந்த அசௌகரியமும் இல்லை என விளக்கினார். குறிப்பாக, கிளாம்பாக்கத்தில் இருந்து மக்கள் வசதிக்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் 3 மற்றும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிளாம்பாக்கத்தில் இருந்து நகரின் பல பகுதிகளுக்கும் செல்ல 550 மாநகரப் பேருந்துகள் மூலம், 4 ஆயிரத்து 651 டிரிப்கள் என்ற அடிப்படையில் இயக்கப்படுவதாகவும், வெளியூர் பயணிகள் எடுத்து வரும் சுமைகள், மாநகரப் பேருந்துகளில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார். கிளாம்பாக்கம் பேருந்து முனைய விவகாரத்தில் சுமூக தீர்வு காணும் வரையில், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் வரும் பிப்.03ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், ஆம்னி உரிமையாளர்கள் தரப்பில், கிளாம்பாக்கத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் 77 தனியார் பேருந்துகள் மட்டும் நிறுத்த முடியும், ஆனால் கோயம்பேட்டில் 380 பேருந்துகள் நிறுத்த முடியும் என தெரிவித்தபோது, கோயம்பேடு 36 ஏக்கர் மட்டுமே என்றும், ஆனால் கிளாம்பாக்கம் 86 ஏக்கரில் உள்ளதாகவும், கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் புறப்படும் இடத்தில் 70 பேருந்துகள் மற்றும் பார்க்கிங் ஏரியாவில் 300 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கலாம் என விளக்கம் அளித்தார்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கியதற்கு தமிழக அரசை பாராட்ட வேண்டுமென கூறிய நீதிபதி, எந்த திட்டமாக இருந்தாலும் அதில் சில குறைபாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும், அவற்றை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

பயணிகள் சுமைகளை எடுத்து வருவதையும், வேறு பேருந்திற்கு மாறுவதையும், பண விரயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது என தெரிவித்த நீதிபதி மஞ்சுளா, பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்குவதற்கும் மற்றும் வெளியூரிலிருந்து வரும் பயணிகளின் சுமைகளை வைப்பதற்கும் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்.7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: திமுக தேர்தல் பணிக்குழு கூட்டம்.. உதயநிதியின் அடுத்த மூவ் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.