ETV Bharat / state

ஆன்லைன் வர்த்தக தளங்களில் வேலை என மோசடி.. - online job scam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 10:29 AM IST

Online Job Scam Issue: அமேசான், மீசோ உள்ளிட்ட இணையத்தளங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, டாஸ்க் கொடுத்து இளைஞர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 15 போலி ஏடிஎம் கார்டு, 3 செல்போன் மற்றும் 15 வங்கிப் புத்தகம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான கும்பலின் புகைப்படம்
கைதான கும்பலின் புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அருண் (26) என்பவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். அதற்காக கடந்த சில நாட்களாக அருண் ஆன்லைனில் வேலை தேடி வந்ததுள்ளார். அப்போது, கடந்த மார்ச் 31ஆம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில் அமேசான், மீசோ உள்ளிட்ட ஆன்லைன் வேலை வாய்ப்பு குறித்து பதிவிட்டிருந்ததால், வேலை தேடும் ஆர்வத்தில் இருந்த அருணும் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார்.

அப்போது அந்த லிங்கில் தங்களுக்கு வேலை வேண்டும் என்றால், தாங்கள் சொல்லும் டாஸ்க்கை நிறைவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை நம்பிய அருண், டாஸ்க்கை செய்யத் தொடங்கியுள்ளார். அப்போது ஒவ்வொரு டாஸ்க்கும் ஒரு தொகையைச் செலுத்த வேண்டும் எனவும், அப்போது தான் டாஸ்க்கின் இறுதி கட்டத்திற்குச் செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டிருந்ததால், அருண் அந்த லிங்கில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.5 லட்சம் வரை செலுத்தியுள்ளார்.

பின்னர் அதில் குறிப்பிட்டது போல் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. அந்த மர்ம நபர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண், இதுகுறித்து கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்களது இருப்பிடத்தைக் கண்டுபிடித்த தனிப்படை போலீசார், அங்கு சென்று பெண் உட்பட 3 நபர்களை கைது செய்துள்ளனர். பின்னர், காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்‌.

அந்த விசாரணையில், அவர்கள் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22), அண்ணாநகர் சாந்தோம் காலணி பகுதியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தைச் சேர்ந்த சரஸ்வதி (23) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்குகள் தொடங்கி, அதன் மூலம் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்பிலிருந்ததும் தெரிய வந்தது‌ள்ளது. மேலும், இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டதும், இவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பெற்று மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 15 போலி ஏடிஎம் கார்டு, 3 செல்போன் மற்றும் 15 வங்கிப் புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்‌.

விழிப்புணர்வு தகவல்: தமிழ்நாடு போலீசார் தரப்பில், ஆன்லைன் மோசடி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மக்கள் இதுபோன்ற அடையாளம் தெரியாத மோசடி கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். அடையாளம் தெரியாத யாருக்கும் தங்களது சொந்த தரவுகளை பகிர்வதையும், ஆன்லைனில் வரும் லிங்க்குகளை கிளிக் செய்து பார்ப்பதையும் தவிர்க்கவும். மோசடி தொடர்பாக ஏதேனும் அழைப்போ அல்லது குறுஞ்செய்திகளோ வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை அணுகவும்.

இதையும் படிங்க: தெலங்கானா மாணவர் அமெரிக்காவில் மாயம்! என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.