ETV Bharat / state

தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட்; மக்கள் பாதுக்காப்பாக இருக்க எஸ்.பி. வேண்டுகோள்! - ORANGE ALERT THOOTHUKUDI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 4:07 PM IST

Orange alert to Thoothukudi: தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முன்னச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், மழை தொடர்பான கோப்புப்படம்
தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்துள்ளதால் பொதுமக்கள் முன்னச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காற்று, மழை மற்றும் இடி, மின்னலின்போது மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் பொதுமக்கள் செல்லக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகே செல்வதோ, தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மின்வாரிய அலுவலர் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமலும், அதனருகில் செல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கி இருக்கும்போது, அதன் அருகே பொதுமக்கள் செல்லக்கூடாது. மழைக் காலத்தில் குழந்தைகளை தனியாக வீட்டை விட்டு வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம். இடி, மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களுக்கு அடியிலோ, மின் கம்பங்களுக்கு அடியிலோ நிற்கக்கூடாது. பாதுகாப்பான கான்கிரீட் கூரை கட்டிடங்களில் நில்லுங்கள்.

மேலும் மழையின்போது தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தொலைப்பேசி பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம். வீடுகளில் உள்ள சுவர்களில் நீர் கசிவு இருந்தால், அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டதால், மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள், மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கும், அதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பங்களுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்தவோ, மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின் கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது. பழமையான கட்டிடங்கள் மற்றும் கட்டைக்குத்து வீடுகள் இடிந்து விழும் நிலையில் இருந்தால் அங்கு இருக்க வேண்டாம்.

பாதுகாப்பான இடங்களில் இருந்து கொள்ளவும். குளங்கள், ஆறுகள், ஏரிகள், நீர்த்தேக்கங்களுக்கு வரும் வெள்ள நீரை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம். குழந்தைகளை எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்கள் ஓட்டுபவர்களும் மிதமான வேகத்தில் நிதானமாக ஓட்டி, விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்களின் அவசர உதவிக்கு இலவச அழைப்பு எண்.100 மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 95141 44100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் மக்கள்; வனத் துறை எச்சரிக்கை! - Sakkaraipallam Floods

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.