ETV Bharat / state

"57 கிராமங்களை யானை வழித்தடமாக அறிவித்ததை மறுபரிசீலனை செய்க" - தமிழ்நாடு விவசாய சங்கம்! - Coimbatore Elephant Corridor Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 7:42 AM IST

Coimbatore Elephant Corridor Issue: கோவை வனக் கோட்டத்தில் உள்ள 57 கிராமங்களை யானை வழித்தடமாக அறிவித்துள்ளதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

TN Farmers Association Coimbatore President S Palanisamy Press Meet
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: தமிழக அரசு, கோவை வனக் கோட்டத்தில் உள்ள 57 கிராமங்களை யானை வழித்தடமாக அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து யானை வழித்தட அறிவிப்பு குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில், "தமிழக அரசு சார்பில் யானைகள் வழித்தட திட்ட அறிக்கை 161 பக்கங்களைக் கொண்டு ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தலைமை வன பாதுகாவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தமிழகத்தில் சுமார் 42 யானை வழித்தடங்கள் இருப்பதாக கணக்கிட்டு 29.4.2024 அன்று வரைவு அறிக்கையினை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனை தமிழில் வழங்க வேண்டும் அதற்கு பொதுமக்களின் கருத்தை அறிந்துகொள்ள கால அவகாசம் வேண்டும் அதேபோல 2000மாவது ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 25 யானை வழித்தடங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 18 யானை வழித்தடங்களும் 2023ஆம் ஆண்டு 20 யானை வழித்தடங்கள் இருப்பதாகவும் அதில் ஐந்து வழித்தடங்கள் கேரளா மற்றும் கர்நாடகாவில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தமிழகத்தில் சுமார் 42 வழித்தடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ச்சியாக பேசிய அவர், "கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், போலுவாம்பட்டி ஆகிய வனச்சரகங்களில் சுமார் 520 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய பூமிகளை யானைகள் வழித்தடத்திற்காக கையகப்படுத்துவது என்ற முடிவு ஒருதலைப்பட்சமாக இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்.

மேலும், விவசாய பூமிகளை கையகப்படுத்துவதன் காரணமாக பல நூறு ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுவரும் விவசாயம் அழிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் விவசாய உற்பத்தி செய்யும் நிலத்தின் பரப்பளவு குறைந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் விளைபொருட்களும் பற்றாக்குறை ஏற்படும்.

ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள 557 கிராமங்கள் மற்றும் கோவையில் 57 கிராமங்கள் யானை வழித்தடமாக வனத்துறை அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். யானைகளுக்கு வனப்பகுதிக்குள் தேவையான உணவு வகைகள் ஏற்படுத்தி தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதுமட்டும் அல்லாது, வனத்தை ஒட்டி உள்ள ஆன்மீக தளங்கள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு கூடங்களை அகற்ற வேண்டும். இதைச் செய்தாலே வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

இதை தவிர்த்து, புதியதாக யானை வழித்தடத்திற்காக மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இந்த யானை வழித்தட அறிக்கையினை ஆராய்ந்து அதனை அரசு நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பா.ரஞ்சித் சகோதரர் பிரபு அடியாட்களுடன் சென்று தகராறு.. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.