ETV Bharat / state

“இங்கு கொடி வாங்கினால் எங்கள் கட்சிக்கு வெற்றிதான்..” மதுரை கீழ ஆவணி மூல வீதியில் நடப்பது என்ன? - Political Flags Sale In Madurai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 5:10 PM IST

Lok Sabha Elections 2024: 18வது நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுரையில் அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, மதுரையில் உள்ள கீழ ஆவணி மூல வீதி, அனைத்து கட்சி தொண்டர்களின் சரணாலயமாக மாறியுள்ளது.

Lok Sabha Elections 2024
Lok Sabha Elections 2024

Lok Sabha Elections 2024

மதுரை: வருத்தும் கோடை வெயிலைக் காட்டிலும், கொளுத்துகிறது தேர்தல் பரப்புரை. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள 18வது நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு வகையிலும் அரசியல் கட்சிகள் களத்தில் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை உட்பட விருதுநகர், தேனி என மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிறைவுற்று, அதன் அடிப்படையில் மனுக்கள் ஏற்கப்பட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், தற்போது தங்களது பரப்புரையைத் தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், அம்மன் சன்னதிக்கு அருகே உள்ள கீழ ஆவணி மூல வீதியில், அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் சின்னங்கள் பல்வேறு வகையில் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாது, தோரணக் கோடி, கட்சிகளின் வண்ணங்களைக் கொண்ட துண்டு, அட்டை பதாகைகள், பேட்ச்கள், தொப்பி, தலைவர்களின் முகங்களைக் கொண்ட முகமூடிகள் என விற்பனை தூள் பறக்கத் தொடங்கியுள்ளது.

இது குறித்து தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக நிர்வாகி முருகன் கூறுகையில், "மதுரை கீழ ஆவணி மூல வீதியில் உள்ள கடைகள்தான் கொடிகள் வாங்குவதற்கு உகந்தவை. எப்போது தேர்தல் வந்தாலும், இங்கு வந்து தான் வாங்கி செல்வது வழக்கம். அனைத்து கட்சிகளின் தொண்டர்களும், பிரதிநிதிகளும் இங்கு வந்து தான் வாங்கிச் செல்கின்றனர். இதனால் தற்போது அந்தப் பகுதியே பரபரப்பாக உள்ளது" என்றார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை வடக்கு தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ராஜேஷ் கண்ணா கூறுகையில், "ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் பொழுதும் எங்கள் கட்சிக்கும், கூட்டணிக்கும் தேவையான கொடிகளை இங்கு வந்து தான் வாங்கிச் செல்கிறோம். குறிப்பாக, இங்கு உள்ள கடையில் வாங்கினாலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இது ராசியான கடை என்பதால், தொடர்ந்து இங்கு தான் கொடிகள், பதாகைகள் அனைத்தையும் வாங்கிச் செல்கிறோம்" என்றார்.

இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக் கொடிகளை விற்பனை செய்து வரும் கடை ஒன்றின் ஊழியர் மணிகண்டன் கூறுகையில், "எங்கள் கடையில் கட்சிக் கொடிகள், தோரணக் கொடிகள், மஃப்ளர், தொப்பி, ஐடி கார்டு ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறோம். முதலில் அனைத்தும் பிளாஸ்டிக்கில்தான் வடிவமைத்து விற்று வந்தோம்.

தற்போது முழுவதுமாக பேப்பர், அட்டை மற்றும் துணி ஆகியவற்றில் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறோம். திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் கொடிகளும் இங்கு விற்பனைக்கு உள்ளன. தற்போது தான் அனைத்து கட்சி தொண்டர்களும் வர தொடங்கியுள்ளனர்.

மேலும், இந்த கொடிகள் அனைத்தையும் கடைக்கு வெளியே தொங்க விடக்கூடாது என காவல்துறை கூறியுள்ள காரணத்தால், மக்களின் பார்வைக்கு வைக்க முடியவில்லை. சில கட்சிகளின் சின்னங்கள் மாற்றப்படுவதால், எங்களால் அவற்றை உடனடியாக அச்சடிக்க முடிவதில்லை. இதுபோன்ற சூழலால், கடந்த முறை நிறைய அச்சடித்த பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டன. ஆகவே, இந்த முறை அவர்கள் தருகின்ற ஆர்டர்களை பொறுத்து, நிறைய அச்சடித்து தருவதற்கு திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "மைக் சின்னத்தை மறந்துடாதீங்க" - சின்னத்தை கொண்டு சேர்க்குமா நாம் தமிழர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.