ETV Bharat / state

ரகம்.. ரகமாக... வாக்கு சேகரிக்கும் நாடாளுமன்ற வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 10:27 PM IST

Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் வேட்பாளர்கள், விதவிதமாக நூதன முறையில் வாக்கு சேகரித்து வரும் வேளையில், இன்று(ஏப்.6) பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மேற்கொண்ட வாக்கு சேகரிப்பின் ஒரு கண்ணோட்டம்.

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

வகை வகையாக..வித விதமா.. வாக்கு சேகரிக்கும் நாடாளுமன்ற வேட்பாளர்கள்

தமிழ்நாடு: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும், நிர்வாகிகளும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இட்லி விற்பனை செய்தும், வடையைக் காண்பித்தும், இஸ்திரி செய்தும், நடனமாடியும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வாக்குகள் சேகரித்தனர்.

இட்லி விற்பனை செய்து வாக்கு சேகரிப்பு: புதுச்சேரியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன் தானாம் பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இட்லிக் கடையில் இட்லி விற்பனை செய்தும், இட்லி சாப்பிட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வடையைக் காட்டி பிரச்சாரம்: தேனி நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் நடிகை சசிரேகா ஆண்டிபட்டியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் இரண்டு வடைகளைக் கையில் வைத்துக்கொண்டு இதில் ஒன்று பிரதமர் மோடி சுட்டவடை மற்றொன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்ட வடை என்றும் கூறினார்.

கொடி அணிவகுப்பு ஊர்வலம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றி பாதுகாப்பாகவும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

நடனமாடி வாக்கு சேகரிப்பு: நீலகிரி மாவட்டம், வெலிங்டன் பாய்ஸ் கம்பெனி பகுதியில் அஇஅதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பாரம்பரிய நடனமாடி வாக்குகள் சேகரித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களின் ஒரு விரலால் ஓங்கி அடித்து பாஜக, திமுக கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனத் தெரிவித்தார்.

இஸ்திரி செய்து கொடுத்து வாக்கு சேகரிப்பு: திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் சி.என் அண்ணாதுரை திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அன்னான்டப்பட்டி, வெங்காயப்பள்ளி, கருப்பனூர், பால்னாங்குப்பம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்தார். பால்னாங்குப்பம் பகுதியில் சலவை தொழிலாளி ஒருவரிடம் சட்டைக்கு இஸ்திரி செய்து கொடுத்து நூதனமுறையில் வாக்குகளைச் சேகரித்தார்.

தெலுங்கில் பேசி வாக்கு சேகரிப்பு: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், போட்டியிடும் சௌமியா அன்புமணி இன்று பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார். மாட்லாம்பட்டி மற்றும் பெரியாம்பட்டி பகுதியில் அதிக அளவு தெலுங்கு பேசும் மக்கள் உள்ளதால் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார்.

பஞ்சாமிர்தம் விற்று வாக்கு சேகரிப்பு: திண்டுக்கல் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் திலகபாமா இன்று (ஏப்.06) பழனி பகுதியில், பக்தர்களுக்குப் பஞ்சாமிர்தம் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்.

இதையும் படிங்க: "மக்களோடு மக்களாக உள்ள பாஜக வேட்பாளருக்கு உங்கள் வாக்கைச் செலுத்த வேண்டும்" - ஜி.கே.வாசன்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.