ETV Bharat / state

ராமர் கோயில் கட்டியதால் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 1:14 PM IST

K.S.Alagiri: பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாகவும், ராமர் கோயில் அரசியலுக்கானது, ஆன்மீகத்துக்காக அல்ல என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

tamilnadu congress leader ks alagiri criticized bjp in Tiruvannamalai
திருவண்ணாமலையில் கே.எஸ்.அழகிரி பேட்டி

திருவண்ணாமலையில் கே.எஸ்.அழகிரி பேட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தமிழக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் செந்தமிழ் அரசுவின் மகள் கனிமொழி-விவேக் விக்னேஸ்வரன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (ஜன.31) நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எங்கே இந்தியாவின் பொருளாதார வளர்ந்துள்ளது என்று சொல்லுங்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவேன் எனக் கூறிய பாஜக அரசு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததா? விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்றுகிறேன் என்று சொன்னார்கள் அதைச் செய்தார்களா? பண மதிப்பு இழப்பீடு கொண்டு வந்து ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பதினைந்து லட்ச ரூபாய் தருவேன் என்று சொன்னார்கள் அதைச் செய்தார்களா?

கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்களா? பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 10 ஆண்டுகளில் புதிய தொழிற்சாலைகள் இந்தியாவில் வந்து உள்ளதா? எந்த வகையில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாகப் பாரத பிரதமர் மோடியோ, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ அல்லது குடியரசுத்தலைவர் தனது உரையில் சொல்ல முடிந்ததா?

இந்தியாவின் பொருளாதாரம் பாஜக ஆட்சியில் வளர்ந்துள்ளது என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 15 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வந்தார்.

இதனைப் பாராட்டி ஐநா சபை மன்மோகன் சிங் அரசுக்குச் சான்றிதழை அளித்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பண வீக்கத்தைக் குறைத்தது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பணவீக்கம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வைச் சந்தித்தது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், உலகில் உள்ள நாடுகளில் இந்தியா தான் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்று வருகிறது. இதைப் பத்திரிகையாளர்கள் தமிழக பாஜக மாநில தலைவரிடம் கேட்டிருக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதால், தான் அவர்கள் ராமர் கோயிலைப் பற்றிப் பேசி வருகிறார்கள்.

ராமருக்குக் கோயில் கட்டக்கூடாது என்று யாரும் கூறவில்லை. அனைவரும் ராமர் பக்தர்களே. இஸ்லாமியர்கள் கூட ராமர் கோயிலைக் கட்டுங்கள் என்று தான் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஒரு மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயிலைக் கட்டக்கூடாது என்பதுதான் எதிர்க்கட்சிகளான எங்களுடைய நிலைப்பாடு.

அயோத்தியில் 3 ஆயிரத்து 200 ராமர் கோயில்கள் உள்ளன. தற்போது இந்த அயோத்தி ராமர் கோயில் 3 ஆயிரத்து 201 ஆக உள்ளது. ஆக 3 ஆயிரத்து 200 ராமர் கோயில்கள் உள்ள நிலையில், ஏன் பாபர் மசூதியை இடித்தீர்கள்? ராமர் கோயில் திறப்பு மூலம் மக்களைத் திசை திருப்புகிறார்கள்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்கின்றார்கள். இந்த பாத யாத்திரையினால் மோடி ஆட்சிக்கு முடிவு வரும். ராமர் கோயில் கட்டுவதன் மூலமே ஒருவர் தேர்தலில் ஜெயித்து விட முடியாது. அயோத்தியில் கோபுரமே இல்லாமல் கும்பாபிஷேகம் செய்த ஆட்சி பாஜக ஆட்சி.

ராமருக்காக பாஜக இதைச் செய்யவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக செய்தது என்று பலர் சொல்கிறார்கள். ராமர் கோயில் என்பது அரசியலுக்காக நடைபெறுகிறது. ஆன்மீகத்துக்காக அல்ல. காங்கிரஸ் கட்சி இதை வன்மையாகக் கண்டிக்கிறது. மதசார்பற்ற கூட்டணி இதை வன்மையாக கண்டிக்கிறது” என்றார்.

தேர்தலில் சீட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்பதைக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுகவைப் போல் பாஜக ஊழல் கட்சி இல்லை..! திருப்பத்தூரில் அண்ணாமலை பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.