ETV Bharat / state

“சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி கேரண்டி கொடுத்தாரா?” - ராமதாஸ்-க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி! - MK Stalin on PMK alliance

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 10:44 PM IST

CM MK Stalin: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு பிரதமர் மோடி கேரண்டி கொடுத்தாரா என ராமதாஸுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி
MK Stalin

தருமபுரி: தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ராமதாஸ்-க்கு மோடி கேரண்டி கொடுத்தாரா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, "நாம் கேட்பது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏன் செய்யவில்லை என்று ராமதாஸ் கேட்டாரா? இப்போதாவது இந்தக் கோரிக்கையை பிரதமர் ஏற்று இருக்கிறாரா? மோடி இப்போது கேரண்டி கேரண்டி என்று விளம்பரப்படுத்துகிறாரே. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா?

மோடி கேரண்டியில், இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா? ராமதாஸ் மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தை பெற்று இருக்கிறாரா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பா.ஜ.க.

இன்று இந்திய அளவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவும், இடஒதுக்கீடு விழுக்காட்டை அதிகரிக்கும் வாக்குறுதி அளித்திருக்கும் ஒரே தேசிய கட்சி காங்கிரஸ். மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அதை வாக்குறுதியாக தந்திருக்கிறார்.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அந்த மாதிரி வாக்குறுதி உண்டா? ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம் இதைப் பற்றி பேசுகிராரே? இதைச் சொன்னால், நீங்களே ஏன் நடத்தவில்லை என்று நம்மை கேட்கிறார்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்வது, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது, அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு, எடுக்கப்பட வேண்டியது. அதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில அரசால் சர்வேதான் எடுக்க முடியும். சென்சஸ் எடுக்க முடியாது.

இந்த நடைமுறையெல்லாம் சமூகநீதிப் போராளியான ராமதாஸுக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை. தெரிந்தே, இந்த அரசியலை நடத்துகிறார். அவர் மேல் வைத்திருக்கும் பெரும் மரியாதைக்காக இதற்கு மேல், நான் எதுவும் பேச விரும்பவில்லை" என பேசினார்.

இதையும் படிங்க: தாதா - அரசியல்வாதி - சிறைவாசி.. யார் இந்த முக்தார் அன்சாரி? - Who Is Mukhtar Ansari

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.