ETV Bharat / state

விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது - பிரதமர் மோடி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 7:23 AM IST

Khelo India 2023 inauguration: விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்வதாகவும், இந்தியாவை விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் நாடாக மாற்ற விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழகத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஜன.19) நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும், இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, 250 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, டிடி பொதிகையின் புதிய பரிமாற்றத்தையும், டிடி தமிழ் என்ற பெயரையும் தொடங்கி வைத்தார். பின்னர், விழாவில் பேசும் போது, "வணக்கம் சென்னை" எனக் கூறிய அவர், "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும், பெருமை முயற்சி தரும்" என்கிற திருக்குறளையும் மேற்கோள்காட்டி பேசத் துவங்கினார்.

அப்போது பேசிய அவர், "2024ஆம் ஆண்டு விளையாட்டுத் துறைக்கு சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா விளையாட்டு அமைந்துள்ளது. தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். சென்னைக்கு வந்தது, சொந்த ஊருக்கு வந்ததுபோல் இருக்கிறது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தைக் காண ஆர்வமாக இருக்கிறேன். விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது. விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில், விளையாட்டுத் துறையில் பல மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் அடைந்துள்ளது. மேலும், கேலோ இந்தியா என்பது வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான மிகப்பெரிய அச்சாணியாக இருந்து வருகிறது. மேலும், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியா எடுத்து நடத்த உள்ளது.

மேலும், கடந்த 10 ஆண்டு காலமாக விளையாட்டுத் துறையின் வளர்ச்சிகள் மற்றும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. இன்று, விளையாட்டு தொடர்பான துறைகளில் தங்கள் வாழ்க்கையை உருவாக்க விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாய்ப்பாக உள்ளது.

கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம், கேலோ இந்தியா பிரச்சாரத்தின் கீழ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க கல்விக்கூடங்கள், ஆயிரம் கேலோ இந்தியா மையங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்களை உருவாக்கியது" எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர்கள் நிஷித் பிராமானிக், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கேலோ இந்தியா 2023; சென்னை வந்தார் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.