ETV Bharat / state

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு.. துரைமுருகன் கொண்டுவந்த முக்கிய தீர்மானம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 2:29 PM IST

Tamil Nadu Assembly: 2024 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு வழங்கிய உரையை முழுமையாக வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது முதல் ஆளுநர் புறக்கணித்த உரைகளின் தமிழாக்கத்தை சபாநாயர் அப்பாவு வாசித்தவற்றை இங்கு காணலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: 2024 ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப்.12) ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. இதில், தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். மேலும், உரையில் உள்ள பல வாசகங்கள் ஏற்புடையதாக இல்லை என்பதால் வாசிக்க வில்லை என ஆளுநர் காரணம் கூறியுள்ளார். 'வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத்' எனக் கூறி தனது உரையை 2 நிமிடங்களில் ஆளுநர் தனது உரையை நிறைவு செய்தார்.

இதன் பின்னர், ஆளுநர் படிக்காமல் விட்ட தமிழ்நாடு அரசு உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, வணக்கம். 2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தில் எனது உரையை நிகழ்த்துவதை நான் பெரும்பேறாகக் கருதுகிறேன். அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இப்புத்தாண்டில் நமது மாநிலத்தில் மகிழ்ச்சியும், வளமும், நலமும் தழைத்தோங்க எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த இந்த அரசின் உயர்ந்த நோக்கங்களை, காலத்தை வென்ற திருவள்ளுவரின்

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து" (குறள்-738)

என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு, உரையை தொடங்க விரும்புகின்றேன் என்றார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு பின்வருமாறு உரையை வாசித்தார்.

  • பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு: நமது மாநிலம், இந்தியாவின் 9% -க்கும் அதிகமான பொருளாதாரத்தில் பங்கினை அளிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில், 7.24 சதவீத நிலையான தேசிய வளர்ச்சி வீதத்தை விஞ்சி, நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19% ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், சராசரி பணவீக்கத்தைப் பொறுத்தவரை, 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் 6.65% பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, பணவீக்கம் தமிழ்நாட்டின் 5.97% ஆக உள்ளது.
  • மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம்: மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021-22ஆம் ஆண்டில் 4ஆம் இடத்திலிருந்த நமது மாநிலம், 2022-23ஆம் முதலிடத்திற்கு ஆண்டில் நாட்டிலேயே முன்னேறியுள்ளது. நிதி ஆயோக்கின் 2022ஆம் ஆண்டு ஏற்றுமதித் தயார்நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை விஞ்சி, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
  • வலுவான பொருளாதாரம்: சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு' இதற்கு ஒரு சான்றாகும். தமிழ்நாட்டின் தலைசிறந்த தொழில் சூழலமைப்பையும் அதன் எதிர்காலத்திற்கேற்ப மனிதவளத்தையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
  • உலக முதலீட்டாளர்கள் மாநாடு: இம்மாநாட்டின் 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவிலான, மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்நிகழ்வில் முதலமைச்சர், '1 டிரில்லியன் டாலர் தமிழ்நாடு பொருளாதாரம் குறித்த தொலைநோக்கு' ஆவணத்தை வெளியிட்டார். இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
  • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜன.19, 2024 அன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 13 நாட்கள் நடந்த இப்போட்டிகளில், 26 விளையாட்டுப் பிரிவுகளில் நாடு முழுவதிலுமிருந்து 5,600 இளம் விளையாட்டு வீரர்கள் தேசிய அரங்கில் தங்களின் திறனை வெளிப்படுத்தினர். இதில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களைப் பெற்று, இந்தியாவிலேயே இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தது.
  • மழை வெள்ளம் நிவாரணம்: முதலமைச்சர் 1,487 கோடி ரூபாய் செலவில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் உள்ளிட்ட பல நிவாரணம் அறிவித்தார். மேலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரிதும் சேதமடைந்த பகுதிகளில், பாதிக்கப்பட்ட 6.63 லட்சம் குடும்பங்களுக்கு ரொக்க நிவாரண உதவியாக தலா 6,000 ரூபாயும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சேதமடைந்த பகுதிகளிலுள்ள, பாதிக்கப்பட்ட சுமார் 14.31 லட்சம் குடும்பங்களுக்கு, தலா 1,000 ரூபாயும், 541 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்.
  • மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத எதிர்பாரா மழைப்பொழிவினால் மாநிலத்தின் பொதுச் சொத்துகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெருமளவில் சேதமான நிலையில், தென் மாவட்டங்களுக்கு 18,214 கோடி ரூபாயும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 19,692 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது.
  • மகளிர் உரிமைத் திட்டம்: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூகநீதி மற்றும் சமத்துவம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையிலான திராவிட மாடல் ஆட்சி முறையைப் பின்பற்றுவதில் இந்த அரசு உறுதியான நோக்கத்துடன், அரசு தனது முதன்மைத் திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத்" தொடங்கி, 1:15 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கி, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டியுள்ளது.
  • பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2023ஆம் ஆண்டு செப்.15 ஆம் நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், மாநிலத்தில் பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்குப் பெருமளவில் ஊக்கமளிக்கும்.
  • 273 லட்சம் மாணவிகள் பயன்: பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம் என்பதை நன்கு உணர்ந்துள்ள இந்த அரசு, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, பின்னர் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கிடும் வகையில், அறிமுகப்படுத்தப்பட்ட 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம்' மூலம் நடப்பு கல்வியாண்டில், இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 273 லட்சம் மாணவிகள் பயனடைகின்றனர். அதோடு, அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவியரின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்த அரசின் முன்னோடித் முதலமைச்சர் தொடங்கிய 'காலை உணவுத் திட்டத்தைத்', இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கும் இத்திட்டத்தை தெலுங்கானா மாநிலம் பின்பற்றத் தொடங்கியது. முதல் ஆறு மாத காலத்திற்கு 1,543 பள்ளிகளில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனைக்குப் பிறகு, இத்திட்டம் மாநிலத்தில் உள்ள 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 16.85 லட்சம் மாணவர்கள் பயனடைய விரிவாக்கம் செய்யப்படும்.
  • தந்தை பெரியாரின் இலட்சியங்களைப் பின்பற்றி, அனைத்து குடிமக்களின் கண்ணியத்தையும் காக்க விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவது அரசின் தார்மீகக் கடமை மட்டும் அல்ல, மாறாக மக்களின் உரிமை என்று இந்த அரசு நம்புகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, 'ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டுச் செயல் திட்டம்-2024' எனும் சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத் தொடரின் போது அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
  • ஊரக மற்றும் நகர்ப்புரப் பகுதிகளிலுள்ள, ஆதி திராவிடர் குடியிருப்புகளில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக 'அயோத்திதாச பண்டிதர் மேம்பாட்டுத் திட்டத்தை' குடியிருப்புகள் இந்த அரசு தொடங்கியுள்ளது. குடிநீர் வழங்கல், மின்வசதி, குடியிருப்புகளுக்கு சாலை வசதி, பூங்காக்கள் மற்றும் நூலகங்கள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு வசதிகள் போன்ற 1,769 பணிகளுக்காக, 2023-24 ஆம் நிதியாண்டில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • மானியத்துடன் கூடிய கடனுதவி வாயிலாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' என்ற முன்னோடித் திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், 755 பயனாளிகளுக்கு 84 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பெருமளவில் உதவிடும் வகையில், விடுதிகளில் மாதாந்திர உணவுக் கட்டணத்தை பள்ளி மாணவர்களுக்கு 1,000 ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாகவும் கல்லூரி மாணவர்களுக்கு 1,100 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் 1.71 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர் என்பன உள்ளிட்டவைகள் இதில் இடம்பெற்றன.

இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழிலும், ஆங்கிலத்திலும் மன்றத்தில் அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம் பெற என தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் பேரவையில் முன்மெழிந்தார். அதை தொடர்ந்து வாக்கெடுப்பின் அடிப்படையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றபட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டதன் அடிப்படையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய அனைத்து பகுதிகளும் அவை குறிப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கூட்டத்தின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதே நடைமுறை எனவும் பேரவை எப்போதும் இம்மரபை பின்பற்றி வருவதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், 'உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொன்னீர்கள். மத்திய அரசு எங்களுக்கு ஒருபைசா கூட நிதி தரவில்லை. PM care fund-ல் இருந்தாவது 50 ஆயிரம் கோடியை ஆவது வங்கி தாருங்கள். கோட்சே , சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல, நீங்கள்' என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் உரை நிராகரிப்பு.. 2 நிமிடங்களில் நிறைவு செய்த ஆளுநர்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.