ETV Bharat / state

பாஜக-அதிமுகவை பிரித்ததே அண்ணாமலை? தேர்தலில் அண்ணாமலையின் பங்கு 'பூஜ்யம்' - எஸ்.வி.சேகர் பகீர் குற்றச்சாட்டு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 9:10 AM IST

Updated : Feb 4, 2024, 11:30 AM IST

S.V. Sekar: பிரதமர் மோடியின் புகழை உயர்த்துவதற்கு பாடுபடாமல் தன் புகழை உயர்த்த அண்ணாமலை பாடுபடுவதாகவும் இதனால், தமிழகத்தில் பாஜக 40-க்கு 40 தொகுதியில் வெற்றி பெற முடியாது; ஒரு தொகுதி வேண்டுமானால் கிடைக்கும் எனவும் நடிகர் எஸ்.வி சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

S.V. Sekar
எஸ்.வி.சேகர் பேட்டி

எஸ்.வி.சேகர் செய்தியாளர் சந்திப்பு

திருச்சி: நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் தலைவர் மகள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகரும், பாஜக நிர்வாகியான எஸ்.வி சேகர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக அவர் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்வதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “அரசியலுக்கு வரும் நடிகர் விஜய், முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் போது, தனித்து நின்று ஓட்டு வங்கியை நிரூபித்துவிட்டால், அதன்பின் பெரிய எதிர்காலம் இருக்கும். முதல் தேர்தலிலேயே கூட்டணிக்குள் சென்றுவிட்டால், தனித்த ஓட்டு வங்கியை கண்டுபிடிப்பது கஷ்டமான செயலாகிவிடும். அவர் விரும்புவதை தமிழக அரசியலில் செய்ய முடியுமா? என்பதையும் யோசிக்க வேண்டும்.

எம்ஜிஆர், சிவாஜி என்றெல்லாம் எடுக்கக்கூடாது. எம்ஜிஆர் பெரிய கட்சியிலிருந்து அதன் வளர்ச்சிக்கு உழைத்து, அங்கு கருத்து வேறுபாடு காரணமாக, வேறு கட்சி ஆரம்பித்தபோது, மக்கள் பெரிதாக ஏற்றுக்கொண்டு மாபெரும் கட்சியானது. ஒரு எம்ஜிஆர் தான் இருக்க முடியும்.

நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக கட்சி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, 3வது முறையாக மோடி பிரதமராவார். வட இந்தியாவில், 'ராமர்' அவருக்கு அந்த ஆசீர்வாதம் கொடுப்பார்". அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' குறித்த கேள்விக்கு, "நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலையின் பங்களிப்பு பூஜ்யமாகத்தான் இருக்கும். அவருடைய நடைப்பயணம் கேள்விக்குறியதாக தான் உள்ளது.

அதிமுக-பாஜகவை பிரித்தது அண்ணாமலை - எஸ்.வி.சேகர்: குழந்தைத்தனமான அரசியல்வாதியான அண்ணாமலைக்குக் கட்சியை வளர்க்கும் திறமை பூஜ்யம் தான். அதன் ரிசல்ட் மே மாதத்தில் தெரியும். அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, அதிமுகவுடன் கூட்டணி இருக்கக்கூடாது என்றுதான் அண்ணாமலை வேலை செய்தார். அந்த வேலை நிறைவேறி விட்டது.

அதன் பலன், இந்த தேர்தலில் தெரிந்து விடும். பாஜக 3% ஓட்டு உள்ள கட்சி. பாஜக வளர்ச்சி மே மாதம் தான் தெரியும். அண்ணாமலை பாஜவுக்கு எதிராக செயல்படுகிறார் என்றே சொல்கிறேன். பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது போல், 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றிபெற முடியாது. ஒரு தொகுதி வேண்டுமானால் கிடைக்கும். விகிதாச்சார அடிப்படையில் ஓட்டுக்களைக் கணக்கிட்டால், கூட்டணி பலம்தான் தேர்தலில் வெற்றிபெற வைக்கும். தேர்தல் காலத்தில், உயிரிழப்பு ஏற்பட்டால் தான் அனுதாப அலை ஏற்படும். மற்ற நேரங்களில் அனுதாப அலை வேலை செய்யாது.

அண்ணாமலையின் நடைபயணம் வெற்றி தராது: மோடி அரசின் திட்டங்களை, மக்களிடம் அண்ணாமலை சரிவர எடுத்துச் செல்லவில்லை. அண்ணாமலை போன பாதை தவறாகி விட்டது. அவர் நடைப்பயணம் செல்வதால் வரும் கூட்டம் வாக்கு வங்கியாக மாறாது. என்னைப் பார்க்க வரும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறும் என்று நினைத்தால், எனக்கு ஏதோ வேறு கோளாறு என்று அர்த்தம்.

வாழ்வாதாரமின்றி போராடும் பிராமணர்களின் ஓட்டு நோட்டாவிற்கே!: நாடாளுமன்றத்திலும், சட்டபேரவையிலும், நாட்டில் இருக்கும் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பிரதிநிதி இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு ஒரு பிரதிநிதி கூட இல்லாததால், அவர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். தினசரி வாழ்வாதாரத்துக்காக போராடும் பிராமணர்கள், 30 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படையான சமூகநீதி கிடைக்காவிட்டால், அவர்கள் வாழ்க்கை நோட்டாக்கு போட்டு விடுவார்கள்.

மோடியின் புகழை உயர்த்த பாடுபடாமல், அண்ணாமலை தன் புகழை உயர்த்திக் கொள்ளப் பாடுபடுவதால், எத்தனை தொகுதி கிடைக்கும் என்பது தேர்தலில் தெரியும். சிறந்த கொள்கைகளோடு ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத பாஜக கட்சியைப் பெரிய அளவில் எடுத்துச் செல்லும் முயற்சிகளை கத்துக்குட்டி அண்ணாமலை செய்யவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க: 74 வயதில் முனைவர் பட்டம்.. ஓய்வு பெற்ற பேருந்து நடத்துநரின் தமிழ் ஆர்வம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

Last Updated :Feb 4, 2024, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.