ETV Bharat / state

எம்.பி சீட் கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி - திருநாவுக்கரசர் - Su Thirunavukkarasar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 2:07 PM IST

Su.Thirunavukkarasar: நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்துள்ளார்.

Su Thirunavukkarasar
எம்.பி சீட் கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசர் வாய்ப்பு மறுக்கப்பட்டு மதிமுகவுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க முயன்றவர்களுக்கு நன்றி கூறி, ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி நாடாளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் கரோனா தொற்றால் பாதிப்புக்கு உண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள், எனது நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது.

திருச்சியில் நிறைவேற்றிய நலத்திட்டப் பணிகள்: தேர்தல் வாக்குறுதியான, சுமார் 10 ஆண்டு காலமாக முடிவு பெறாமல் "தொங்கு பாலம்” என்று சொல்லப்பட்டு வந்த ஜங்ஷன் மேம்பாலத்திற்கு ராணுவ இடம் பெறப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை பெற்று தந்துள்ளேன். திருச்சி பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு திறக்கப்பட்டது.

பி.எச்.இ.எல் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை, ராணுவத்திற்கான டேங்க் தொழிற்சாலை, ரயில்வே தொழிற்சாலை, மத்திய வாழை ஆராய்ச்சி நிறுவனம், மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, நாடாளுமன்றத்திலும், கமிட்டிகளிலும், அமைச்சர்களிடமும் பேசி இவை திறம்பட இயங்க உதவியுள்ளேன்.

தொல்லியல் துறையை தமிழக மாநிலத்தில் இரண்டாகப் பிரித்து திருச்சியை மையமாகக் கொண்டு 20 மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டல அலுவலகத்தை கொண்டு வந்துள்ளேன். ஸ்மார்ட் சிட்டி, தொழில்நுட்ப பூங்கா, புதிய இணைப்பு ரயில்கள், புதிய விமான சேவைகள், புதிய பேருந்து நிலையம், குடிநீர் வடிகால் பணிகள் இப்படி பல பணிகள் நடைபெற குரல் கொடுத்தும், துணை நின்றும் செயல்பட்டுள்ளேன்.

87 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 53.4 லட்சம் மதிப்பிலான 87 நான்கு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கி, இந்தியாவிலேயே எங்கும் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யாததை செய்துள்ளேன். மாணவ, மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்ச், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்றவற்றை வழங்கியுள்ளேன்.

இத்தொகுதியில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இத் தொகுதி மக்களுக்காக எனது பணி எப்போதும் தொடரும். என் வாழ்நாளில், என் இல்லத்தில் நான் இருந்த நாட்களை காட்டிலும் மக்களோடு நான் இருந்த நாட்களே அதிகம். எனது மக்கள் பணி தொடரும்.

எம்.பி சீட் கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி: இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியல் ரெடி! உச்சக்கட்ட பயத்தில் மோடி' - மு.க.ஸ்டாலின் - MK Stalin

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.