ETV Bharat / state

சம வேலைக்கு சம ஊதியம்; முதலமைச்சர் முகமூடி அணிந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 5:28 PM IST

Updated : Mar 1, 2024, 9:06 PM IST

SSTA Protest: இடைநிலை ஆசிரியர்கள், முதலமைச்சர் முகமூடி அணிந்து பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் 12வது நாளாக இன்று தங்களது போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

SSTA Protest
முதலமைச்சர் முகமூடி அணிந்து போராடிய இடைநிலை ஆசிரியர்கள்

முதலமைச்சர் முகமூடி அணிந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் முதலமைச்சர் முகமூடி அணிந்து பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், 12வது நாளாக இன்று (மார்ச் 1) 'சம வேலைக்கு சம ஊதியம்' வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், மண்டபத்தில் அடைக்கப்பட்ட போதும், ஊதிய தீண்டாமையை நீக்க வேண்டும் எனவும், பிறந்தநாள் பரிசாக அளிக்க வேண்டும் எனவும் கோரி கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1-க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது. இதை களையக்கோரி பல்வேறு போராட்டங்களை இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அறிக்கையில், வரிசை எண் 311-இல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு, அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த நிலையில் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, கடந்த பிப்.19ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் குறித்து மேலும் சில சங்கங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டியுள்ளதாகவும், அதன் பின்னர் அறிக்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்படும் என்பதால், இடைநிலை ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாந்தன் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது!

Last Updated : Mar 1, 2024, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.