ETV Bharat / state

திருப்பூரில் காரும், அரசு பேருந்தும் மோதி கோர விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி - TIRUPPUR ACCIDENT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 9:32 AM IST

Tiruppur accident
Tiruppur accident

Tiruppur accident: திருப்பூர் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாத குழந்தை உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த சோகம் நேர்ந்துள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகர், சித்ரா தம்பதியினரின் தங்களது 60 ஆவது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக நேற்று திருக்கடையூர் சென்று விட்டு, மீண்டும் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வெள்ளக்கோவிலை கடந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, அப்போது ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, சந்திரசேகர் ஓட்டிச் சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக மோதி பயங்கரமான விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(60), அவரது மனைவி சித்ரா(57), இளவரசன்(26), அரிவித்ரா(30), மூன்று மாத பெண் குழந்தை சாக்சி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளக்கோவில் காவல்துறையினர், கார் மற்றும் பேருந்தை மீட்டு போக்குவரத்தைச் சீர் செய்தனர். தற்போது இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் என்ன? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூரில், சாலை விபத்தில் 3 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது பெண் புகார்.. திண்டுக்கல்லில் பரபரப்பு.. - Woman Sexual Harassment In Dindigul

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.