ETV Bharat / state

எம்.எஸ்.சுவாமிநாதனை போல் பாரத ரத்னா விருதுக்கு அவர் தகுதியானவர்: மூத்த பத்திரிகையாளர் என்.ராம் சுட்டிக்காட்டும் மற்றொருவர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 7:05 PM IST

Updated : Feb 10, 2024, 6:24 AM IST

முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் என்.ராம், வெண்மை புரட்சிக்கு காரணமான வர்கீஸ் குரியனுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Senior journalist N Ram reaction on Bharat ratna award MS Swaminathan and PV Narasimha rao
எம்.எஸ்.சுவாமிநாதனை போல் பாரத ரத்னா விருதுக்கு அவர் தகுதியானவர்

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் ஆகிய மூவருக்கும் இன்று மத்திய அரசு பாரத ரத்னா அறிவித்துள்ளது. இதேபோல் அமுல் வர்கீஸ் குரியனுக்கும் பாரத ரத்னா அறிவிக்க வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடக ஆசிரியர் சங்கர நாராயண் சுடலைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி: மத்திய அரசு மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கருதுகிறீர்கள்? குறிப்பாக தமிழகத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமை புரட்சி எற்படுத்தியதற்காக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையாளராக அவரது பணி குறித்த உங்களின் கருத்து என்ன?

பதில்: எனக்கு பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனை ரொம்ப நன்றாகவே தெரியும். நெருங்கிய பழக்கம் உள்ளது, அடிக்கடி பேசுவோம். அவரது சாதனை மட்டுமல்ல அவரது வாழ்க்கையும் மகத்தானது. பரிசுகள் கிடைக்கும் போது அதை அறக்கட்டளைக்கே வழங்கி விடுவார். அது தான் அவரது அர்ப்பணிப்பு மனப்பான்மை. அவர் முதலில் ஐபிஎஸ் தேர்வு எழுதினார். அந்த பக்கம் போய் இருந்தால் பெரிய போலீஸ் அதிகாரியாகி இருப்பார். அவருக்கு அறிவியலில் இருந்த ஆர்வம் காரணமாக மரபணு ஆய்வுகளில் ஈடுபட்டு, ஹாலந்தில் படித்தார்.

அவருக்கு அப்போதைய அமைச்சர் சி.சுப்பிரமணியம் மிகவும் ஆதரவாக இருந்தார். இன்றைக்கு சில பேர் பசுமைப் புரட்சியால் பாதகங்கள் ஏற்பட்டிருப்பதாக பேசலாம், அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். பசுமைப் புரட்சி இல்லை என்றால் பஞ்சமும் பட்டினியும் தான் ஏற்பட்டிருக்கும். பொதுச்சட்டம் 480 (PL 480) படி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டன. அதனால் பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் தெரியத்துவங்கியது.

பின்னர், பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (International Rice Research Institute) இயக்குநராக இருந்தார். அவருக்கும் வாழும் போதே பாரத் ரத்னா வழங்கி இருக்க வேண்டும். நான் யாருக்கும் வக்காலத்து வாங்க மாட்டேன். எல்லோருக்கும் தெரியும், அவர் இருக்கும் போது அவருக்கு கொடுக்காமல் யார் யாருக்கெல்லாமோ கொடுத்தார்கள். நான் இந்த கட்சியை மட்டும் சொல்லவில்லை. அதேநேரத்தில் மற்றொரு முக்கியமான நபர் டாக்டர் வர்கீஸ் குரியன். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்திச் சென்றாரோ, அப்படி வெண்மைப் புரட்சியை முன்னெடுத்து சென்றவர்.

டாக்டர் சுவாமிநாதனுக்கு முதலிலேயே வேளாண்மையில் ஆர்வம் இருந்தது. ஆனால் அமுல் குரியன் என்றழைக்கப்படும் வர்கீஸ் குரியனுக்கு (Verghese Kurien) முதலில் அப்படி ஆர்வம் இல்லை. இஞ்சினியரான வர்கீஸ் குரியன் அமெரிக்காவில் படித்து அங்கே இருந்தவர். ஆனால் அந்த வெண்மைப் புரட்சி நடவடிக்கையில் அவர் மிகப்பெரிய பங்காற்றினார். அதனால் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வு பெரும் மாற்றம் அடைந்தது. அதனால் இந்தியா பால் உற்பத்தியில் மிகை நிலை அடைந்தது. அவருக்கும் நாளைக்கே கூட டுவிட்டரில் பிரதமர் அறிவிக்கலாம்.

அரசியல் தலைவர் பி.வி.நரசிம்ம ராவை எனக்கு நன்றாக தெரியும். அவர் ஆந்திரா அரசியலில் இருக்கும் போதே தெரியும். அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது நன்கு தெரியும். அவர் அறிவுத்திறன் மிக்கவர். அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, அவர் பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பெரும் வளர்ச்சி ஏற்பட்டது, அதில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அவருடைய சாதனையை போற்றும் வகையில் அவருக்கு பாரத ரத்னா அறிவித்தது பொருத்தமானது.

சரண் சிங்கும் அது போல தான். அவரைப் பற்றி புத்தகமே உள்ளது. அதைப் படித்தால் அவரது சாதனைகள் தெரியும். இப்போது தேர்தலின் போது ஏன் இவர்களுக்கு விருது கொடுத்தார்கள் என்ற விவகாரத்திற்குள் எல்லாம் நான் போகவில்லை. இவர்களுக்கு பாரத ரத்னா அறிவித்தது ஒரு நல்ல தேர்வு, அதை வரவேற்க வேண்டும்.

இவர்களுக்கு அறிவித்தது மகிழ்ச்சி, டாக்டர் வர்கீஸ் குரியனுக்கும் அறிவித்தால் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகமாகும். அது இன்னும் நியாயமான முடிவாக இருக்கும். சுவாமிநாதனும், வர்கீஸ் குரியனும் ஒரே மாதிரியாக பங்காற்றியவர்கள். கூட்டுறவு என்பது அது தான். அவரது வாழ்நாள் முழுவதும் அதை தனியார் மயமாக்க கூடாது என தான் போராடினார். அவருக்கும் அம்ரிதா பட்டேலுக்கும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் உண்டு.

The Hindu N.Ram, Senior Journalist
The Hindu N.Ram, Senior Journalist

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் நிகழ்ச்சியில் அமுல் தான் ஸ்பான்சர், அதன் மேலாண் இயக்குநரை சந்தித்து பேசிய போது, இன்னும் கூட்டுறவு செயல்பாட்டில் தான் இயங்குவதாகத் தெரிவித்தார். அது வர்கீஸ் குரியனின் மறக்க முடியாத சாதனை, அதற்காக பாரத ரத்னா அளித்து அங்கீகரிக்க வேண்டும். ஏனென்றால் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை மாற்றியுள்ளார்கள்.

நரசிம்ம ராவை எடுத்துக் கொண்டால் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளால் அரசிடம் இருந்து எடுத்து தனியாருக்கு வழங்கியதாக விமர்சிக்கப்படுகிறது. இப்போது அரசு மீது இதேபோல் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. முன்பு எடுத்த தனியார்மயமாதல், தாராளமயமாதல் நடவடிக்கைகள் தற்போது மக்களுக்கு பயனுள்ளதாக மாறியுள்ளன. இதை நாம் எப்படி அணுக வேண்டும்.

நானும் அதை விமர்சன ரீதியாகத் தான் பார்க்கிறேன். அந்த காலத்தில் அத்தகைய செயல்களால் சமமற்ற தன்மை வளர்ந்தது. ஆனால் வளர்ச்சி ஏற்பட்டது. நாம் பேசுவது அது சரியான பாதையா என்பதல்ல. அவர் செய்தது ஒரு முக்கியமான சாதனையாகத் தான் பார்க்க வேண்டும்.

நரசிம்ம ராவ் பெரிய அறிவாளி, அவருக்கு பல மொழிகள் தெரியும். ஒருமுறை நாங்கள் டெல்லி சென்றோம், நான் இங்கிருந்தும், அவர் ஹைதராபாத்தில் இருந்தும் சென்றோம். அப்போது நரசிம்மா ராவ், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய லவ் இன் த டைம் ஆப் காலரா (Love in the Time of Cholera) எனும் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் ஒரு தூதுவர் தனக்கு இந்த புத்தகத்தை கொடுத்ததாக என்னிடம் தெரிவித்தார். அவர் ஸ்பானிஷில் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தெரிவித்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது அவரிடம் நீங்கள் மார்க்வெசை ஸ்பெனிஷில் படிப்பீர்களா எனக் கேட்டேன். அதற்கு அவர் ஜேஎன்யுவில் வகுப்பெல்லாம் போனேன், அதனால் படிப்பேன் எனத் தெரிவித்தார்.

அப்போது அவரிடம் நீங்கள் அமெரிக்கத் தூதரிடம் கேட்க வேண்டியது தானே ஸ்பானிஷில் வேண்டும் என்று கூறினேன், அப்போது அவர் வெளியுறவுத் துறை அமைச்சர். பின்னர் நான் அமெரிக்கா செல்லும் போது கட்டாயம் வாங்கி வருகிறேன் எனக் கூறினேன். பின்னர் அதை ஸ்பானிஷ் மொழியில் வாங்கி அவருக்கு அனுப்பி வைத்தேன்.

12, 13 மொழி அவருக்கு தெரியும். நிறைய இலக்கியங்கள் படிப்பார். ஆனால் பிரதமர் ஆன பின்னர் படிப்பதற்கு நேரமில்லை எனக் கூறினார். பிரதமர்களில் நேருக்கு பின்னர் நரசிம்ம ராவ் தான் அறிவுஜீவி எனக் கூறலாம். அவரை சிறந்த தலைவர் எனக் கூறவில்லை, ஆனால் அவர் அறிவாளி. அவருடைய காலத்தில் நடந்த மாற்றங்கள், அதெல்லாம் பல சர்ச்சைகள். ஆனால் இன்று நாம் மகிழ்ச்சியாக உள்ளோம். அவர் எனக்கு நல்ல நண்பர் எனக் கூறலாம்.

மன்மோகன் சிங் ஒரு முக்கியமான பிரதமராக இருந்துள்ளார். அறிவுஜீவிகளில் அவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜவஹர்லால் நேரு, பி.வி.நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் அவர்கள் கொள்கைகள் மீது என்ன பார்வை இருந்தாலும் அவர் ஒரு முக்கியமான அறிவுஜீவி. பாரத் ரத்னாவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

ஆழமாக பல விஷயங்களை ஆராய்ந்து முடிவெடுப்பதில் பிரதமர்களில் அவர் ஒரு அறிவுஜீவி. கொள்கையுடன் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, அது வேறு விஷயம். ஆனால் பிரதமருக்கும், அரசியல் தலைவருக்கும் ஒரு ஆழம் தேவை, அது அவர்களுக்கு எல்லாம் இருந்து உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு; யார் இந்த வேளாண் விஞ்ஞானி? - முழு விவரம்

Last Updated :Feb 10, 2024, 6:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.