ETV Bharat / state

“சவுக்கு சங்கரின் கையை உடைத்தது போலீசாரின் அராஜக செயல்”.. எச்.ராஜா விளாசல்! - H Raja about Savukku Shankar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 9:36 PM IST

Senior BJP leader H.Raja: நாடாளுமன்றத் தேர்தலில் 380 தொகுதிகளில் 3வது முறையாக பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது எனவும், இனி வரும் தொகுதிகள் பாஜகவிற்கு போனஸ் ஆகத்தான் இருக்கிறது எனவும், கஞ்சாவை வைத்து சவுக்கு சங்கரை கைது செய்து அவரது கையை உடைத்தது காவல்துறையின் அராஜக செயலாக உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா புகைப்படம்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,"இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 380 தொகுதிகளில் 3வது முறையாக பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது. இனி வரும் தொகுதிகள் பாஜகவிற்கு போனஸ் ஆகத்தான் இருக்கிறது.

நட்சத்திர வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம்தான். கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தோல்வி பயத்தின் காரணமாகவே ரேபரலி தொகுதியில் போட்டியிடுகிறார். உத்திர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயவதிக்கு எம்பி, எம்எல்ஏ இல்லாமல் இருந்தாலும், 10 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ளது.

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணியில் இருந்த போதும் 64 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. தற்போது தனித்து நிற்பதால் பாஜகவிற்கு வெற்றி எளிதாகிவிட்டது. என்னைப் பற்றியே விமர்சனம் செய்தவர்தான் யூடியூபர் சவுக்கு சங்கர். அவர் செய்தது தவறாக இருந்தாலும், கஞ்சாவை வைத்து கைது செய்து அவரது கையை உடைத்தது காவல்துறையின் அராஜக செயலாக உள்ளது.

மருத்துவப் பரிசோதனையில் அவரது கையில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், பிரதமரை அவதூறாகப் பேசிய அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

திமுகவினரின் வீடுகளில் இருந்து தான் ஜாபர் சாதிக் 2,000 கோடி ரூபாய் கஞ்சா கடத்தலுக்கு கொண்டு சென்று இருக்கிறார். தமிழக முதலமைச்சர் கஞ்சாவை ஒழிப்பது குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்குவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.

தொடர்ந்து, தற்போது பெய்த கோடை மழை குறித்து கேட்டபோது, “கோடை மழை பெய்தது நல்லது தான். சுமார் ஒரு மாதமாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் அடித்தது. ஆனால், தற்போது மழை பெய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. பயணிகள் பேருந்துகளின் உள்ளேயும் குடை பிடித்து தான் பயணிக்கிறார்கள். அரசுப் பேருந்துகளை பார்த்தாலே பயமாக உள்ளது.

பேருந்தில் சக்கரங்கள் கழன்று காரின் மீது மோதி விடுமோ என பயமாக உள்ளது. இந்த அளவிற்கு தான் போக்குவரத்துக் கழகங்கள் இருக்கின்றன. தமிழக அரசு நிர்வாகம் மோசமாக உள்ளது. விரைவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிவந்திபுரம் பகுதியில் 3 பேரை தாக்கிய இரண்டு குரங்குகள் பிடிபட்டன! - Monkeys Were Caught Sivanthipuram

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.