ETV Bharat / state

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.69.70 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு! - Satyabrata Sahoo

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 5:39 PM IST

Election officer satyabrata sahoo: இதுவரை தமிழ்நாட்டில் 33.31 கோடி ரூபாய் பணம் உட்பட 69.70 கோடி மதிப்பிலான பொருட்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 6.51 கோடி ரூபாய் வருமான வரித்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு
ரூ.69 கோடியே 70 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22 வரை, 6.18 கோடி வாக்களர்கள் இருந்த நிலையில், தற்போது 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண் வாக்காளர்களும், 8 ஆயிரத்து 465 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.

18 வயது பூர்த்தியான முதல் முறை வாக்காளர்களாக 10 லட்சத்து 90 ஆயிரத்து 574 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களாக 4 லட்சத்து 61 ஆயிரத்து 730 நபர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 991 பேரும் உள்ளனர். இந்த தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வகையில் படிவம் 12 டி அறிமுகப்படுத்தப்பட்டு, தபால் மூலம் வாக்குகளைச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 4 லட்சத்து 30 ஆயிரத்து 734 மூத்த குடிமக்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டதில், 77 ஆயிரத்து 455 படிவங்கள் மட்டுமே திரும்ப வந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர், அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 59 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 25 கம்பெனி துணை ராணுவம் தமிழ்நாடு வந்துள்ளனர். மீதம் உள்ள கம்பெனி துணை ராணுவத்தினர் ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டிற்கு வர உள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 33.31 கோடி ரூபாய் பணம் உட்பட 69.70 கோடி மதிப்பிலான பொருட்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 6.51 கோடி ரூபாய் வருமான வரித்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில், வாக்கு செலுத்தும் மையத்திற்குள்ளேயும், அதற்கு வெளியேவும் வெப் கேமரா வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சி-விஜில் ஆப் (cVIGIL) மூலன் 1299 புகார் கிடைக்கப் பெற்று, அதில் 955 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெயில் அதிகமாக இருப்பதால், வாக்கு செலுத்த வரும் பொதுமக்களுக்கு சேர் வசதி, வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல், தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தேவைப்படும் வாக்காளர்களுக்கு ஓ.ஆர்.எஸ் பவுடரும் வழங்க இருக்கிறோம்.

வேட்பாளர்களுக்கான சின்னங்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மோடி தொடர்பாக பேசியது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறாதவர்களுக்கு அளிப்பதற்காக உள்ள சின்னங்களை மட்டுமே பெற முடியும், அந்தப் பட்டியலில் பம்பரம் இல்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "வேறு சின்னத்தில் போட்டி".. துரை வைகோ! - Durai Vaiko

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.