ETV Bharat / state

மன்சூர் கட்சியில் மன்சூரே இல்லையா? - "ஆடியோ ஆதாரம் இருக்கு" என எச்சரிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 12:57 PM IST

Mansoor Ali Khan Political Party: இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மன்சூர் அலிகானை நீக்கியதாக ஒரு அறிக்கை வெளியான நிலையில், தீர்மானம் நிறைவேற்றிய கண்ணதாசன் தனக்கு ஆபீஸ் பாயாக இருந்தவர் என மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். ஈடிவி பாரத்துக்கு பேட்டி அளித்த கண்ணதாசன் மன்சூர் பேசிய ஆடியோ ஆதாரங்களை வெளியிடப்போவதாக கூறியுள்ளார்.

mansoor ali khan removed from leader post of democratic tigers party of india
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மன்சூர் அலிகான் நீக்கம்

மன்சூர் அலிகான் பேசிய ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாக கண்ணதாசன் எச்சரிக்கிறார்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று (மார்ச் 15) வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இந்த அவசர கூட்டத்தில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்குவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. ஆனால் அந்த அறிக்கை லெட்டர் பேடிலும் மன்சூர் அலிகான் புகைப்படம் இருந்தது தான் விந்தையாக இருந்தது. மிகச்சமீபத்தில் தான் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை சந்தித்து மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த மன்சூர் அலிகான், கண்ணதாசன் கட்சியின் பொதுச்செயலாளர் இல்லை என்றும் சமீபத்தில் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை திருடிச் சென்றதாகவும் அவர்மீது குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியில் என்னதான் நடைக்கிறது என்ற குழப்பம் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கண்ணதாசன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். இதில், "இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று (மார்ச் 15) எனது தலைமையில் நடைபெற்றது. அதில் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி, அனைத்து அதிகாரங்களும் பொதுச் செயலாளருக்கே என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மன்சூர் அலிகான் தன்னிச்சையான நபராக இருக்கிறார். ஒரு கட்சியின் கட்டமைப்புகளுக்கு கட்டுப்பட்டவராக அவர் இல்லை. அவரது முடிவுகளுக்கு கட்சி கட்டுப்பட வேண்டும் என்று நினைக்கிறார். எந்த விஷயத்திலும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதில்லை. மாற்றி மாற்றி பேசுகிறார். இதுகுறித்து அவரை பலமுறை தொடர்பு கொண்டும், அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதனால் வேறு வழியின்றி அவரை நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லா கட்சி நிர்வாகிகளையும் ஒருமையில் பேசுகிறார். அது கட்சி தலைமைக்கான அழகு அல்ல. மன்சூர் அலிகான் மனப்பிறழ்வில் பாதிக்கப்பட்டு உள்ளார். அவசர அவசரமாக ஒரு அறிக்கையை இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ளார். அவர் பேசிய ஆடியோக்கள் என்னிடம் உள்ளது. அவர் தயார் என்றால், நான் அதை வெளியிடத் தயார்.

என்மீது வேறு குற்றச்சாட்டு வைக்க முடியாததால், திருடன் பட்டம் கொடுக்கிறார். பதற்றத்தில் இருக்கும் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் இது போன்ற கீழ்த்தரமான செயலில் இறங்கியுள்ளார். எங்களுக்கும் இறங்கத் தெரியும். அது அவருக்கு அழகாக இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு மன அழுத்தத்தில் மன்சூர் அலிகான் உள்ளார். ஒரு கட்சி நடத்த அவருக்குத் தகுதி இல்லை. மக்கள் நலனுக்காக இல்லாமல், தனக்கான தேவைக்கு மட்டுமே செயல்படுகிறார். கட்சியின் உறுப்பினராக இருக்க விரும்பினால் இருக்கட்டும். மன்சூர் அலிகானை நம்பி யாரும் செல்ல மாட்டார்கள். அவருடைய நடைமுறை சரியில்லை.

அதிமுக உடன் கூட்டணி வைக்கும் அவரின் திட்டம் நடக்காது. இந்த தேர்தலில் எப்படியாவது தனக்கு பொருளாதார லாபம் கிடைத்து விடும் என்று நம்பினார். ஆனால் அதற்கான வழி இல்லை. நிறைய செலவுகளைச் செய்துள்ளார். இப்படி நிலை இல்லாத நபராக இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி வாகன பேரணிக்கு அனுமதி அளித்தது ஏன் - நீதிபதி விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.