ETV Bharat / state

தோசை, இட்லி இருக்கட்டும் தமிழைப் பிடிக்குமா? தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள்? - ராகுல் காந்தி சரமாரி கேள்வி - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 11:20 AM IST

Rahul Gandhi: தமிழ்நாட்டில் எனக்கு தோசை உள்ளிட்டவைகள் பிடிக்கும் என்ற பிரதமர் மோடிக்கு, தமிழைப் பிடிக்குமா? எனவும் தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள்? எனவும் பிரதமர் மோடியை நோக்கி ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

Rahul Gandhi Speech at Coimbatore Campaign Rally
Rahul Gandhi Speech at Coimbatore Campaign Rally

கோவை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தேசிய கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி (INDIA Alliance) வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்தத் தலைவர் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.

அப்போது மேடையில் பேசிய ராகுல் காந்தி, "நான் தமிழ்நாட்டிற்கு வருவதை விரும்புகிறேன். இந்த மாநில மக்களின் மொழி, வரலாறு எனக்கு வழிகாட்டியாக உள்ளது. இன்று சித்தாந்த போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பிறகு மோடி அரசு போய்விடும். இதை மோடியின் அரசு அல்ல, அதானி அரசு என தான் அழைக்க வேண்டும். அவர் அதானிக்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் அதானி பற்றி பேசியதும், என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சில வாரங்களில் பறிக்கப்பட்டது. எனது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டேன். ஆனால், எனக்கு லட்சக்கணக்கான மக்களின் வீடுகள் உள்ளன. தமிழ்நாடு மக்களின் வீடுகள் எனக்காக திறந்துள்ளது. எனக்கும் உங்களுக்கும் அரசியல் ரீதியாக உறவு அல்ல, குடும்ப ரீதியான உறவு உள்ளது.

உங்களுக்கென தனி வரலாறு உள்ளது. பெரியார், அண்ணாதுரை, காமராஜர், கலைஞர் ஆகியோர் தலைவர்கள் மட்டுமல்ல; மக்களின் உணர்விலும், உயிரிலும் கலந்தவர்கள். ஏன் எங்கள் மொழி, வரலாறு, பாரம்பரியம் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? தமிழ்நாடு வந்தால், பிரதமர் மோடி தோசை பிடிக்கும் எனவும், டெல்லிக்கு சென்றால், ஒரே நாடு ஒரே மொழி எனவும் கூறுகிறார். ஏன் ஒரே மொழி? தமிழ், கனடா உள்ளிட்டவை மொழிகள் இல்லையா?

உங்களுக்கு தோசை, வடை பிடிக்கும் என்பது இங்கு பிரச்சனை இல்லை. தமிழ் மொழியைப் பிடிக்குமா? இந்த நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன செய்தீர்கள்? மோடி முதலில் அரசியலை சுத்தப்படுத்தப் போகிறேன் என்றார். அதற்காக புதிதாக தேர்தல் பத்திரம் கொண்டு வந்தார். அதில், எவ்வளவு பணம் கொடுத்தாலும், யார்? என வெளியே தெரியாது. உச்சநீதிமன்றம் இது சட்டவிரோதம் என்றது. யார் பணம் கொடுத்தார்கள்? என்பதை உச்சநீதிமன்றம் வெளியிடக் கூறியதும், விவரங்களை வெளியிட்டனர்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பாஜகவிற்கு சென்றுள்ளது. சிபிஐ, இடி, ஐடி விசாரணை நடத்திய சில நாட்களில் பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெற்றதும், வழக்கு திரும்பப் பெறப்பட்டது. அதானி அரசை கட்டுப்படுத்திக் கொண்டுள்ளார். உலகில் இதுபோல வேறு யாரும் ஊழல் பண்ணவில்லை; ஆனால், மோடி சுத்தமான அரசியல்வாதி என்கிறார்' என்று குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய ராகுல் காந்தி, 'வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியை விட இந்தியா மோசமாக உள்ளது. மோடி, அதானி அரசியல் இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளது. ஒன்று 'கோடீஸ்வரர்கள் இந்தியா', இன்னொன்று 'ஏழைகள் இந்தியா'. இது சாதாரணமான தேர்தல் அல்ல. தத்துவப் போர். மக்களின் வரலாறு, மொழி, உரிமை, அரசியலமைப்பு சட்டம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் என்பது புத்தகம் அல்ல; அது நாட்டின் ஆத்மா. நாட்டின் ஆத்மா மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்பால் தாக்கப்படுகிறது.

இந்தியா என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு சொந்தமானது அல்ல. தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போன்றவற்றில் ஆர்எஸ்எஸ் தனது ஆட்களை நியமித்துள்ளது. இது இந்திய ஒன்றியத்தின் மீது தொடுக்கப்படும், தாக்குதல். சிபிஐ, ஐடி, இடி வைத்து ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த நாடு பிரதமரின் சொத்து அல்ல, இந்த நாடு மக்களுக்குச் சொந்தமானது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "இந்தியாவில் தத்துவ போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" - ராகுல் காந்தி சாடல் - RAHUL GANDHI CAMPAIGN IN TAMILNADU

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.