ETV Bharat / state

திருமண நிகழ்விற்கு சென்று திரும்பும்போது விபத்து.. 15 பேர் காயம்! - bus accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 4:25 PM IST

Private Bus Accident: திருமண நிகழ்விற்காக கன்னியாகுமரி சென்று வந்த தனியார் பேருந்து திருச்சி துவரங்குறிச்சி அருகே விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து விபத்துக்குள்ளான புகைப்படம்
தனியார் பேருந்து விபத்துக்குள்ளான புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)

திருச்சி: கள்ளக்குறிச்சியில் இருந்து தனியார் பேருந்து மூலம் திருமண நிகழ்விற்காக 45 பேர் கன்னியாகுமரி சென்று விட்டு, நேற்று இரவு (மே 13) திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இந்த தனியார் பேருந்தை சின்னசேலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த நிலையில், இன்று (மே 14) அதிகாலை 5.30 மணி அளவில், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்துள்ளது.

அப்போது ஓட்டுநர் மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்பாராத விதமாக 20 அடி பள்ளத்தில் பாய்ந்த நிலையில், அங்கிருந்த கிணற்றுப் பகுதி தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், இதில் பயணம் செய்து வந்த முகிலன் (13), அண்ணாமலை (58), சக்திவேல் (53), வேலாயுதம் மனைவி மின்னல் கொடி (33), விக்னேஷ் மனைவி அனுசியா (27) உள்ளிட்ட 15 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் குற்றம் புதிது! - Kuttram Pudhithu

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.