ETV Bharat / state

குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - பல்வேறு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 10:38 PM IST

Spread rumors regarding child abduction: குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு மாவட்ட காவல் துறையின் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்
திண்டுக்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் காவல் நிலையத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் பற்றிய வதந்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. பெற்றோர், குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.

மேலும், வட மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே வதந்தி பரப்பிய வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த இருவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்களை பரவவிட்ட வடிவேல், தங்கராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வந்தால், உண்மைத் தன்மை அறியாமல் பகிர வேண்டாம்.

தொடர்ச்சியாக யாரேனும் இது போன்ற தகவல்களை பகிர்ந்தால், உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவும். மேலும், தங்களது பகுதியில் தெருக்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பின், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களே விசாரிப்பது, வாக்குவாதம் செய்து தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவாரூர்: அதேபோல் திருவாரூர் மாவட்டம், ராயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைமகன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை தாக்கி, அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளார். இந்த வழக்கில் மருத்துவமனையில் இருந்த கலைமகனிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக காவலர்கள் சென்ற நிலையில், தன்னை காவலர்கள் கைது செய்ய வருகின்றனர் என நினைத்து அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

அதை ஒருவர் வீடியோவாக பதிவிட்டு, குழந்தை கடத்த வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என X வலைத்தளத்தில் பதிவிட்டது மட்டும் இல்லாமல், தனது நண்பர்களுக்கும் அந்த வீடியோவை அனுப்பி உள்ளார். பொய் செய்தியை பரப்பிய இவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

இந்த நிலையில், குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல் கண்கானிப்பாளரும் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி மற்றும் தாளாப்பள்ளி கிராமத்தில் நேற்று குழந்தை கடத்த வந்ததாக கூறி 5 வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்திய நிலையில், 5 வட மாநிலத்தவர்களும் பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

எனவே, இது போன்ற போலியான செய்திகளை கேட்டறிந்து, வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீதும், போலியான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகப்படும்டியான நபர்களைக் கண்டறிந்தால் உதவி எண் 100 அல்லது 9498181214, 9498101090 என்ற தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்; சமுதாய வானொலி துவக்க விழா ரத்து? என்ன சொல்கிறார் துணைவேந்தர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.