ETV Bharat / state

இளைஞர்களை குறிவைத்து உயர்ரக போதைப் பொருட்கள் விற்பனை... கொத்தாக கும்பல் சிக்கியது எப்படி? - Drugs seized in Coimbatore

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 9:26 AM IST

Drugs seized in Coimbatore: கோயம்புத்தூரில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் பிடிபட்டதன் மூலம் சப்ளை பாயிண்ட் முழுமையாக நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Confiscated drugs, Police Commissioner Balakrishnan
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் பாலக்காடு நெடுஞ்சாலை கரும்புக்கடை சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கரும்புக்கடை போலீசார் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமாக ஐந்து இளைஞர்களை அழைத்து போலீசார் விசாரித்ததில், அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபட்டோமின், மருந்து குப்பிகள் ஆகியவற்றை வைத்திருந்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஐந்து பேரும் கைது செய்யபட்டு, அவர்களிடம் இருந்து 3 கிராம் மெத்தபடோமெயின் மற்றும் 116 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார், பிரவின் செட்டி, சாகுல் அமீது, முருகன், ரியாஸ்கான், அக்பர் அலி ஆகிய ஐந்து பேரையும் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், “கோயம்புத்தூர் மாநகரில் போதை பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கு தனி படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் ஒரு சில மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மெடிக்கல் சிரஞ்சுகளை வாங்கி ஊசியாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மாத்திரைகளை கர்நாடகாவில் ஹூப்ளி என்ற இடத்தில் இருந்து வாங்கி உள்ளனர். அங்கு பிரவீன் செட்டி என்பவர் மருந்து கடை வைத்து நடத்தி வரும் நிலையில், கோயம்புத்தூரில் இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர்.

கைதானவர்கள்
Arrested people (Credits - ETV Bharat Tamil Nadu)

14 ரூபாய் மதிப்புள்ள இந்த மாத்திரைகளை ஒரு மாத்திரையை 60 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். கோயம்புத்தூரில் மட்டும் 1 லட்ச ரூபாய்க்கும் மேல் இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தார். தற்பொழுது இவர்கள் பிடிபட்டதன் மூலம் சப்ளை பாயிண்ட் முழுமையாக நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோயம்புத்தூர் மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறோம்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாகவே இவற்றையும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார். கோயம்புத்தூரில் கஞ்சா உள்ளிட்டவற்றின் விற்பனை குறைந்துள்ளதால், இது போன்ற மாத்திரைகளை நோக்கி செல்கில்றனர். மேலும், இது போன்ற மாத்திரைகள் தடுக்கப்பட்டதை தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு சென்று வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்” என்று தெரிவித்தார்.

நேற்றைய தினம் காந்திபுரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிந்தே, குடிபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கக்கூடும். மேலும் இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ஆலோசித்து அறிவுரைகளை வழங்கப்பட்டு உள்ளது. SIHS காலணியில் ஏற்பட்ட பிரச்சினையால், அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி உள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: ரூ.1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் கடத்தல்; ஐடி ஊழியரை மடக்கிப் பிடித்த மடிப்பாக்கம் போலீசார்! - High Grade Drugs Seized At Chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.